
ராஞ்சி: திறந்தவெளியில் மலம் கழித்தது தொடர்பான தகராறில் விவசாயி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் சுக்ரா பஜார் என்றொரு பகுதி உள்ளது. இங்கு அடுத்தடுத்த நிலங்களில் வசித்து வருபவர்கள் ராம் மற்றும் சோட்டு குமார் ஆகியோர். இருவரும் ஒருவகையில் உறவினர்களும் கூட. இதில் சோட்டு குமாரின் வயல் வெளிகளில் மலம் கழிப்பது தொடர்பாக ராம் மற்றும் சோட்டு குமார் இடையே தகராறு ஏற்படுவதுண்டு. அத்துடன் நிலம் தொடர்பாகவும் இவர்களின் குடும்பங்களுக்கு இடையில் முன்னரே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் திறந்தவெளியில் மலம் கழித்தது தொடர்பாக மீண்டும் வியாழனன்று ஏற்பட்ட தகராறில், ராம் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக பலமு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்திரஜித் மஹ்தா கூறியதாவது:
சோட்டு குமாரின் நிலப்பகுதியில் உள்ள திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்பாக வியாழனன்று மீண்டும் ராம் மற்றும் சோட்டு குமார் இடையே தகராறு எழுந்துள்ளது. ஒருகட்டத்தில் இந்த தகராறு முற்றி ராமை, சோட்டு குமார், அவரது சகோதரர்கள் மஹிந்தர் குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய மூவரும் தாக்கத் தொடங்கினர். பின்னர் அவர்களுடன் அவர்களது தாயாரான பிஜ்லி தேவியும் சேர்ந்து கொண்டுள்ளார். இறுதியில் ராமை அவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் ராமின் மகன் மனோஜ் குடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிஜ்லி தேவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.