விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட மோடி தள்ளுபடி செய்யவில்லை: ராகுல் ஆவேசம்  

விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட மோடி தள்ளுபடி செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட மோடி தள்ளுபடி செய்யவில்லை: ராகுல் ஆவேசம்  
Published on
Updated on
2 min read

தோல்புர் (ராஜஸ்தான்): விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட மோடி தள்ளுபடி செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு  பகுதியாக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 150 கி.மீ நீள சாலை பயணத்தில் ஈடுபட்டுள்ளார். 

தனது பயணத்தை கிழக்கு ராஜஸ்தானின் தோல்புர் மாவட்டத்தில் உள்ள மணியா என்னும் இடத்தில் அவர் துவக்கினார். உ.பி மற்றும் ம,பி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இஓடத்தில் அவர் பேசியதாவது:

மோடி தான் பிரதமர் ஆக விரும்பவில்லை என்றும் ஒரு காவல்காரனாக இருக்கவே விரும்புவதாக கூறியிருந்தார். தற்போது மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் தான் யாருக்கான காவல்காரனாக இருக்க விரும்புகிறார் என்று கூறவே இல்லை. அவரால் பாதுகாக்கப்படுபவர் அனில் அம்பானிதான் என்பது அனைவருக்கும் தற்போது தெரிய வந்துள்ளது. 

ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் மோடியின் தொழில்துறை நண்பர் ஒருவர்தான் பயன்பெற்றிருக்கிறார். நான் ரஃபேல் விவகாரம் குறித்துப் பேசிய போது, பிரதமர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவே இல்லை. 

தனது நண்பர்களான தொழிலதிபர்கள் பயன்பெறுவது போல் நடந்து கொள்கிறாரே தவிர, பிரதமர் மோடி இந்த நாட்டின் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைக் கண்டு கொள்வதே இல்லை. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பழங்குடியினர் மசோதா, தகவல் மற்றும் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் விவசாயிகளுக்கு ரூ. 7000 கோடி கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசானது இலவச மருந்துகள் திட்டத்தைக் கொண்டு  வந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி அரசும், வசுந்தரா ராஜேவின் அரசம் ஏழை மக்களுக்கு என்ன செய்துள்ளன? விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட மோடி அரசு தள்ளுபடி செய்யவில்லை.

சிறிய அளவில் தொழில் செய்பவர்களிடம் சென்று கேளுங்கள். அவர்களது நிலை என்ன என்பதை? பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சரக்கு மற்றும் சேவை வரியும் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டன. 

நாட்டின் இளைஞர்கள் மோடியின் மீது வைத்த நம்பிக்கையை அவர் சிதைத்து விட்டார். 

பெண் குழ்நதைகளை பாதுகாப்போம் என்ற கோஷத்தை பிரதமர் மோடி முன்வைகிறார். ஆனால் உ.பியில் பெண் ஒருவரை மாநில பாஜக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாநில முதல்வரும் பிரதமரும் என்ன செய்கிறார்கள்?

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நமபிகை உள்ளது. அப்படி வரும் அரசானது ஏழைகள், சிறிய மற்றும் நடுத்தர நிலையில் தொழில் செய்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசாக இருக்கும்.  அமைச்சர்கள் எப்போதும் எல்லாராலும் அணுகக் கூடியவர்களாக இருப்பார்கள். 

இந்த நாட்டைப் பிரிவினை செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உணர்ந்து கொள்ளுமாறு மக்கள் நடந்து கொள்ள வேண்டும்,. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com