அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நீரவ் மோடி நிறுவனத்தின் ஆலோசகரான மகளை வழக்கில் இருந்து காப்பாற்றினார் ஜேட்லி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகர்களாக இருந்த தனது மகளையும், மருமகனையும்

Updated On :22 அக்டோபர் 2018, 8:20 pm


தொழிலதிபர் நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகர்களாக இருந்த தனது மகளையும், மருமகனையும் கடன் மோசடி வழக்கு விசாரணையில் இருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காப்பாற்றியுள்ளார்; தனது பதவியை தவறாகப் பயன்படுத்திய ஜேட்லியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த 44 மாதங்களில் மொத்தம் 19,000 வங்கிக் கடன் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதே மோடி அரசின் சாதனையாகும். இதில் மொத்தம் ரூ.90,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. அதில் ரூ.53,000 கோடியை முறைகேடு செய்த 23 மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். வங்கிக் கடன் மோசடியாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரம் சுணங்கி வருகிறது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி என பலரை தொடர்ந்து தப்பவிட்டதன் மூலம் மக்கள் பணத்தைக் காப்பதில் மோடி அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதும், மோசடியாளர்கள் தப்புவதற்கான பயண ஏற்பாட்டு நிறுவனமாகவே மத்திய அரசு செயல்படுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
மத்திய நிதியமைச்சர் மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி உள்ளார். அவரது மகள் சோனாலி ஜேட்லி, மருமகன் ஜெயேஸ் பக்ஷி ஆகியோர் வழக்குரைஞர்கள். இவர்கள் வங்கிக் கடன் மோசடியாளர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்களாக இருந்துள்ளனர். இதற்காக ரூ.24 லட்சம் கட்டணமும் பெற்றுள்ளனர். ஆனால், நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தலைமறைவாகிவிட்ட பிறகு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள், அவருடன் தொடர்புடைய அத்தனை பேரிடமும் விசாரணை நடத்தினார். ஆனால் ஜேட்லியின் மகள், மருமகனிடம் விசாரணை நடத்தவில்லை. ஜேட்லியின் தலையீடுதான் இதற்குக் காரணம். இதன் மூலம் தனது அமைச்சர் பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே, ஜேட்லியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
ராகுல் குற்றச்சாட்டு: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், மெஹுல் சோக்ஸியை இந்தியாவில் இருந்து தப்பிக்க வைத்ததில் ஜேட்லிக்கு முக்கியப் பங்கு உள்ளது. அருண் ஜேட்லியின் மகளின் வங்கிக் கணக்குக்கு மெஹுல் சோக்ஸியிடம் இருந்து பணம் வந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது. எனவே, ஜேட்லி கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.