
அருணாசல பிரதேச மாநிலத்தில் சியாங் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதியை அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கவுள்ளது.
இந்த நிவாரண நிதி, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மைச் செயலர் பிடோல் டாயெங், பேரிடர் மேலாண்மை இயக்குநர் கான்டோ டாங்கென், எம்எல்ஏ லோம்போ டாயெங் ஆகியோர் சியாங் நதி பாயும் கிழக்கு சியாங் மாவட்டத்தில் மெபோ துணை கோட்ட கிராமப் பகுதியில் வெள்ள பாதிப்புகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், போர்குலி, செராம், நாம்சிங், ராலிங், சிகார் கிராமப் பகுதிகளில் ஆற்றுப் படுகைகளை ஆய்வு செய்த அந்தக் குழுவினர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். எனினும், ஆற்றில் பலமான நீரோட்டம் இருப்பதால் பார்தங் ஆற்றுப் படுகையை ஒட்டிய தீவுப் பகுதியில் அந்தக் குழவினர் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
வெள்ளப் பெருக்கில் மூழ்கிய விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களின் சேத மதிப்பை உடனடியாக கணக்கிடுமாறு கிழக்கு சியாங் மாவட்ட துணை காண்காணிப்பாளர் டேமியோ டாடக்கிற்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கிராமங்கள் மேலும் சேதத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில், ஆற்று சந்திப்புப் பகுதிகளில் பெரிய தடுப்புகளை அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, வெள்ளச் சேதங்களை மதிப்பிட அமைச்சகங்களிடையேயான குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





