
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014, பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதே ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014, ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் 2015, டிசம்பர் 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி, தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும். குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி மீண்டும் கடிதம் எழுதியது. தண்டனைக் கைதிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜூவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





