பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளம், கர்நாடகம், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும், தலைநகர் தில்லிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மேற்கு பகுதி மாநிலங்களிலும் முழு அடைப்புக்கு பகுதியளவு ஆதரவு காணப்பட்டது.
கேரளம், கர்நாடகத்தில்...: மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெறும் கேரளத்தில், அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஊழியர்கள் வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மங்களூரில் திறந்திருந்த கடைகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர்.
பிகாரில் வன்முறை: பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கடைகளும், பள்ளிகளும் அடைக்கப்பட்டிருந்தன. பழைய பாட்னா நகரில் ரயில் தண்டவாளங்களில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்ததால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
இதனிடையே, ஜெஹனாபாத் மாவட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முழு அடைப்பு காரணமாக வாகனம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், குழந்தை இறக்க நேரிட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
அஸ்ஸாமில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பாஜக ஆட்சி நடைபெறும் அஸ்ஸாமில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டன. குவாஹாட்டியில் உள்ள தலைமைச் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஸாவில் ரயில் மறியல் போராட்டங்களால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், அருணாசலப் பிரதேச மாநிலத்திலும் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குஜராத்தில் பகுதியளவு ஆதரவு: குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முழு அடைப்புக்கு பகுதியளவு ஆதரவு காணப்பட்டது. குஜராத்தில் ராஜ்கோட், ஆமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் டயர்களை எரித்து, போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கல்வீச்சில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
பாதிப்பில்லை: உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மிúஸாரம் மாநிலத்திலும் முழு அடைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மாநிலங்களில் பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் திறந்திருந்தன; வாகனங்களின் இயக்கத்திலும் பெரிய அளவில் தாக்கம் இல்லை. பல இடங்களில் ரயில், சாலை மறியல்களில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணிகளில் ஈடுபட்டனர்.
மக்களின் ஆதரவு இல்லை': போராட்டம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் எதிர்மறை கொள்கையின்படி முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேற்ற பாதையில் பயணித்து வருகிறது' என்றார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையிலும், பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியிருப்பது, மக்கள் மீதான மத்திய அரசின் அக்கறையின்மையை காட்டுவதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சாடினார்.