வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிதைக்கப்பட்ட பண்டித நேருவின் கனவு...! நேஷனல் ஹெரால்டு வழக்கும் பின்னணியும்

கடந்த 2011-12 நிதியாண்டில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தாக்கல் செய்திருந்த வருமான வரிக் கணக்குகளை,

News image
Updated On :14 செப்டம்பர் 2018, 9:27 am


கடந்த 2011-12 நிதியாண்டில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தாக்கல் செய்திருந்த வருமான வரிக் கணக்குகளை, அதிகாரிகள் மறு ஆய்வு செய்வதற்குத் தடை கோரி அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. அதனால், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. 
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. இந்திய மொழிகளில் வெளிவந்த பத்திரிகைகளின் நிறுவனர்கள், ஆசிரியர்கள் பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர். மக்களுக்கு சுதந்திர உணர்வை விதைத்து, அவர்களை சுதந்திரப் போராட்டத்தின் பக்கம் திருப்ப பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என ஐவாஹர்லால் நேரு விரும்பினார். 1937-இல் அசோசியேட்டட் ஜெர்னல்ஸ் (ஏஜேஎல்) என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். இந்த நிறுவனம் சார்பில், 1937-இல் நேஷனல் ஹெரால்டு' என்ற ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பத்திரிகை அவரது தனிப்பட்ட சொத்து அல்ல. அப்போது, ரூ. 5 லட்சம் மூலதனத்தைக் கொண்ட இந்த நிறுவனத்தின் 2,000 பங்குகள் ரூ.100 முகமதிப்புள்ளதாகவும், 30,000 பங்குகள் ரூ. 10 முகமதிப்புடையதாகவும் பிரிக்கப்பட்டன. அந்தப் பங்குகள் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களால் வாங்கப்பட்டன. அவர்கள் அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் உரிமையாளர்களாகவும் இருந்தனர்.
இந்தியா சுந்திரம் அடைந்த பிறகும் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனசக்தி' போல, மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தீக்கதிர்' போல, திமுகவுக்கு முரசொலி' போல, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடாக நேஷனல் ஹெரால்டு' தொடர்ந்தது. அதில் அவ்வப்போது பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு கட்டுரைகள் எழுதியும் வந்தார்.
பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு நேஷனஸ் ஹெரால்டு' தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தில்லியிலிருந்தும், லக்னெளவிலிருந்தும் வெளிவந்தாலும் பெயருக்குத்தான் நடத்தப்பட்டு வந்தது.
தொடர்ந்து நிதி நெருக்கடிகளையும், கடன் சுமைகளையும் காரணம் காட்டி, 2008, ஏப்ரலில் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்த போதெல்லாம், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வட்டியில்லாத கடனைப் பெற்றிருந்தது. அந்த வகையில், அந்தப் பத்திரிகை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மொத்தம் ரூ.90.25 கோடியை கடனாகப் பெற்றிருந்தது. ஆனால், பத்திரிகைக்கு தில்லி, லக்னௌ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா உள்ளிட்ட இடங்களில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. 
இதற்கிடையே, 2010-இல், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.5 லட்சம் முதலீட்டில் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், இருவரும் தலா 38 சதவீதம் வீதம் மொத்தம் 76 சதவீதம் பங்குகளை வைத்துள்ளனர். மேலும், சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் தலா 12 சதவீதம் என மொத்தம் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். 
ஏஜேஎல் நிறுவனத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டிய ரூ. 90.25 கோடியை வசூலிக்கும் உரிமையை இந்த யங் இந்தியன் நிறுவனத்துக்கு 2011-இல் காங்கிரஸ் கட்சி வழங்கியது. இதற்காக யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சத்தை காங்கிரஸ் கட்சிக்கு முன் பணமாக அளித்து அந்தக் கடனை வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ஏஜேஎல் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளும் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. ஏஜேஎல் நிறுவனத்தின் சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பெற்றுக் கொண்ட யங் இந்தியன் நிறுவனம், பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் இல்லை என்றும், அது தங்களது நிறுவனத்தின் நோக்கங்களுக்கு முரணானது என்றும் தெரிவித்தது. அப்போது, ஏஜேஎல் நிறுவனத்தின் இயக்குநராக காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோராவும், தலைவராக காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில், ரூ. 2000 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துகளைக் கொண்டிருந்த ஏஜேஎல் நிறுவனம், வெறும் ரூ. 50 லட்சத்தில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்றும் பங்கு மாற்றலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். அதாவது, ஏஜேஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி சொத்துகளை அபகரிப்பதற்காக, சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் திட்டமிட்டு, ரூ.5 லட்சத்தில் யங் இந்தியன்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் முறைகேடான முறையில் அபகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டிய சுப்பிரமணியன் சுவாமி, தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 2012-இல் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் பொதுமக்களின் பணத்தை தனியாருக்கு அளிக்கும் வகையில் யங் இந்தியன் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 2016, அக்டோபரில் நீதிமன்றம் கருத்து வெளியிட்டது.
மேலும், 2010, செப்டம்பர் 29-இல் ஏஜேஎல் நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில், தங்களது நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த பங்குதாரர்களின் அனுமதியில்லாமல் முறையற்ற வகையில் இந்த பங்கு மாற்றம் நடைபெற்றுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். 
மேலும், சுமார் 5000 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட ஏஜேஎல் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளும் முறைகேடாக குறிப்பிட்ட 4 பேருக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். 
இதேபோல, பங்குதாரர்களின் வாரிசுதாரர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். இவர்களில், முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, முன்னாள் காங்கிரஸ் எம்பி விஷ்வ பந்து குப்தா, இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், நேஷனல் ஹெரால்டின் ஸ்தாபக ஆசிரியரும் கே. ராமோ ராவின் மகனுமான விக்ரம் ராவ் உள்ளிட்டோரும் அடங்குவர். 
இந்நிலையில், 2011-12 நிதியாண்டில் தனது வருமானம் ரூ.68 லட்சம் என ராகுல் காந்தி கணக்குக் காட்டியிருந்தார். ஆனால், யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குநராக உள்ள அவருக்கு, ஏஜேஎல் நிறுவனத்தின் சொத்துகளின் வாடகை மூலம் ரூ.154 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று வருமானவரித் துறை தெரிவித்தது. 
எனவே, யங் இந்தியன் நிறுவனத்தில் பங்குதாரர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த 2011-12-இல் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என அவர்களுக்கு கடந்த 2018, மார்ச்சில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து இவர்கள் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகள்தான் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால், நேஷனல் ஹெரால்டு வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாவம், பண்டித ஜவாஹர்லால் நேரு. மிகப்பெரிய கனவுடன் அவரால் தொடங்கப்பட்ட பத்திரிகையும், நிறுவனமும் இப்போது முறைகேடுகளால் முடங்கி விட்டிருப்பதை நினைத்தால், அவரது மனம் என்ன பாடுபாடும்? இந்திரா காந்தி அம்மையார் இருக்கும்வரை, நேஷனல் ஹெரால்டு நாளிதழ் நின்றுவிடாமல் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிபுணர்கள் எழுப்பும் கேள்விகள்...!

1. ஏஜேஎல் நிறுவனத்துக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றின் வாடகை மூலம் அந்நிறுவனத்துக்கு மாதந்தோறும் கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. தில்லி பகதூர் ஷா ஜாபர் மார்க்கில் உள்ள 6 தளங்களைக் கொண்ட ஏஜேஎல் நிறுவனத்தின் ஹெரால்ட் ஹவுஸின் வாடகை மூலமே கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கிறது.
இதே போல லக்னௌ, மும்பை, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் ஏஜேஎல் நிறுவனத்துக்கு சொந்தமாகவுள்ள சொத்துகள் மூலம் வாடகையாக கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், ரூ.90.25 கோடியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அந்த நிறுவனம் கடனாகப் பெற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே கடனாகப் பெற்றிருந்தாலும் கடனைத் தங்களது வருவாய் மூலம் அடைக்க அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை?
2. ஏஜேஎல் நிறுவனம் யங் இந்தியன் நிறுவனத்துக்கு கைமாறிய போது, ஏஜேஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக காங்கிரஸ் கட்சியின் அப்போதைய பொருளாளர் மோதிலால் வோரா இருந்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட யங் இந்தியன் கம்பெனியில் அவருக்கு 12 சதவீத பங்குகள் உள்ளன. கடன் காரணமாக கையகப்படுத்தப்பட்ட கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இருந்த மோதிலால் வோரா, கையகப்படுத்திய நிறுவனத்தின் பங்குகளை எப்படி வைத்திருக்க முடியும்? 
3. யங் இந்தியன் நிறுவனம் 2010, நவம்பர் 23-இல் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்ற ரூ.90.25 கோடி கடனை அந்த நிறுவனத்துக்கு அளிக்க ஏஜேஎல் நிறுவனத்தின் இயக்குநர் குழு எந்த முகாந்திரத்தில் ஏற்றுக் கொண்டது?
4. 1950 மக்கள் பிரதிநிதி சட்டத்தின்படி அரசியல் கட்சிகளால் கடன் வழங்க முடியாது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எந்த அடிப்படையில் ஏஜேஎல் நிறுவனத்துக்கு கடன் வழங்கியது? மேலும், அதன் சொத்துகளை கையகப்படுத்தும் உரிமையை யங் இந்தியன் நிறுவனத்துக்கு எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சி வழங்கியது?
5. ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல், அதைக் கையகப்படுத்தும் உரிமையை புதிய நிறுவனத்துக்கு எப்படி அளிக்க முடியும்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.