திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முறையற்ற உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான ஆண் அல்லது பெண், வேறொரு நபருடன் மேற்கொள்ளும் முறையற்ற உறவு என்பது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக்

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 1:49 am IST


திருமணமான ஆண் அல்லது பெண், வேறொரு நபருடன் மேற்கொள்ளும் முறையற்ற உறவு என்பது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதுதொடர்பான சட்டப்பிரிவு 497-ஐ நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
எனினும், முறையற்ற உறவை சமூக ரீதியான குற்றமாகக் கருதலாம் என்றும், அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தம்பதியரில் ஒருவரது முறையற்ற உறவு காரணமாக மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால், தவறிழைத்த நபர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு 497-இன்படி, வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதம் இல்லாமல் அல்லது அவர் நீக்குப்போக்காக அறியும் வகையில், அப்பெண்ணுடன், ஒரு ஆண் உடலுறவு கொள்வது என்பது, பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது அல்ல என்ற போதிலும், முறையற்ற உறவு என்று கருதப்படும். அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதன்படி, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடமிருந்தது.
அந்த சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.
முறையற்ற உறவு என்பது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். திருமண பந்தத்துக்கு எதிரான குற்றங்களை தண்டனைக்குரியதாகக் கருதுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்த போதிலும், தீர்ப்புகளை தனித்தனியாக வாசித்தனர். அதன் விவரம்:
தீபக் மிஸ்ரா: திருமண வாழ்வில் நடைபெறும் குற்றங்களை, தண்டனைக்குரியது என வகை செய்யும், இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவுகள் 497 மற்றும் 198 ஆகியவற்றை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கிறோம்.
முறையற்ற உறவு என்பது சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமல்ல. அதனை தண்டனைக்குள்ளாக்குவது என்பது பெண்களுக்கான தனித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முறையற்ற உறவு என்பது மண வாழ்க்கை தோல்விக்கான காரணம் அல்ல. மாறாக, மண வாழ்க்கை தோல்வி அடைந்ததன் எதிரொலியாகவே முறையற்ற உறவு ஏற்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வழிநடத்தும் அளவுகோலாக சமத்துவம் விளங்குகிறது. இந்நிலையில், சட்டப்பிரிவு 497 என்பது பெண்களை தன்னிச்சையாக கையாளுகிறது.
ஏ.எம்.கான்வில்கர்: பெண்களை சமத்துவமின்றி நடத்தும் எந்தவொரு சட்டப்பிரிவையும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல என்று சொல்ல வேண்டிய தருணம் இது.
இந்து மல்ஹோத்ரா(பெண் நீதிபதி): அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் வகையில் சட்டப்பிரிவு 497 அமைந்துள்ளது. அந்த சட்டப்பிரிவு இனியும் தொடர்வதில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது.
ஆர்.எஃப்.நாரிமன்: சட்டப்பிரிவு 497 என்பது மிகவும் பழமை வாய்ந்தது. அதன்படி தண்டனை அளிப்பது என்பது, பெண்களுக்கான சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு ஆகிய உரிமைகளை மீறுவதாக அமையும் என்றார். மேலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி கான்வில்கர் ஆகியோரது கருத்துக்களை ஏற்பதாகவும் அவர் கூறினார்.
டி.ஒய்.சந்திரசூட்: கண்ணியமிக்க மனித சமூகத்தில் தனியுரிமை என்பது உள்ளார்ந்த விஷயம். இந்நிலையில், சட்டப்பிரிவு 497-ஆனது, பெண்கள் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதை தடுக்கிறது. முறையற்ற உறவை குற்றமாக்குவது கடந்த காலத்தின் எச்சம்.
பெண்களுக்கான கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், கணவனின் சொத்தாக பெண்ணை கருதும் வகையிலும் அந்த சட்டப்பிரிவு உள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.