தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னகம்!

இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் மத்திய ஆட்சியைத் தீர்மானிப்பதாக விளங்கிய பகுதி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்
தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னகம்!
Updated on
5 min read

 
இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் மத்திய ஆட்சியைத் தீர்மானிப்பதாக விளங்கிய பகுதி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய இந்தியாதான். 
ஆனால் இம்முறை வரலாறு சற்று மாறுகிறது. 132 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள தென்னிந்தியா, இம்முறை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. மத்திய நிர்வாக வசதிக்காக தென்னிந்தியா எனக் குறிப்பிடப்படும் பகுதியில் 5 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவை, தமிழ்நாடு (39 மக்களவைத் தொகுதிகள்),  கேரளம் (20), கர்நாடகம் (28), ஆந்திரப் பிரதேசம் (25), தெலங்கானா (17), புதுச்சேரி (1), அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1).

2014 தேர்தல் முடிவுகள்
சென்ற மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் இருந்து 39 எம்.பி.க்களை மட்டுமே ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றது. தமிழ்நாடு (2), புதுச்சேரி (1), ஆந்திரப்பிரதேசம் (17), தெலங்கானா (1), கர்நாடகம் (17), அந்தமான் -நிகோபர் தீவுகள் (1) பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. இதில் பாஜகவின் பங்கு 22.
அப்போது பாஜகவுடன் கூட்டணித் தோழராக இருந்த தெலுங்கு தேசம் கட்சி தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டது. சென்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றபடி பாஜக கூட்டணியில் பெரிய மாற்றம் இல்லை.
சென்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாடு முழுவதும் பெற்ற 44 இடங்களில் தென்னிந்தியாவின் பங்களிப்பு 24. கேரளம் (12), லட்சத் தீவுகள் (1), கர்நாடகம் (9), தெலங்கானா (2) பகுதிகளில் இக் கூட்டணி வென்றது. இதில் காங்கிரஸ் மட்டும்  19 இடங்களைக் கைப்பற்றியது. 
சென்ற தேர்தலில் கர்நாடகத்தில் தனித்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளமும், தமிழகம், புதுவையில் தனி கூட்டணியாகப் போட்டியிட்ட திமுகவும் இம்முறை காங்கிரஸ் அணியில் சேர்ந்துள்ளன. 
பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 69 இடங்களில் வென்றன. அதில் தமிழகத்தின் அதிமுக (37), தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி (11), ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  (8), இடதுசாரிகள் (10) ஆகியவை முக்கியமானவை. இதில் தற்போது பாஜக அணியில் அதிமுகவும், காங்கிரஸ் அணியில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்துவிட்டன. இடதுசாரிகள் தமிழகத்தில் மட்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர்.

கேரளத்தில் மும்முனைப் போட்டி
20 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இங்கு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 
2014 தேர்தலில் காங்கிரஸ் (8), முஸ்லிம் லீக் (2), கேரள காங்கிரஸ் (1), ஆர்எஸ்பி (1) என காங்கிரஸ் அணி 12 இடங்களிலும், மார்க்சிஸ்ட் (5), இந்திய கம்யூனிஸ்ட் (1), சுயேச்சை (2) என இடதுசாரி ஜனநாயக முன்னணி 8 இடங்களிலும் வென்றன. அப்போது மாநிலத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது.  
2016 பேரவைத் தேர்தலில் இடது முன்னணி வென்று ஆட்சியைப் பிடித்தது; பினராயி விஜயன் முதல்வரானார். மொத்த பேரவைத் தொகுதிகளான 140-இல் இடதுசாரி ஜனநாயக முன்னணி 91 இடங்களிலும்,  காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும், பாஜக ஓரிடத்திலும், பாஜக ஆதரவு சுயேச்சை ஓரிடத்திலும் வென்றனர்.  
இன்றைய அளவில், நாட்டில் இடதுசாரிகளின் செல்வாக்கு நிலவும் ஒரே மாநிலமாக கேரளம் உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்டுகளும் மாறி மாறி அதிகாரத்தைப் பகிர்ந்து வந்துள்ளன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பாஜகவின் ஆதரவு தளம் கேரளத்தில் சிறுகச் சிறுக விரிவடைந்துள்ளது. அக்கட்சிக்கு 15 சதவீதம் வரை வாக்கு வங்கி இருந்தபோதிலும் அந்த அளவுக்கு வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. இந்நிலையை வரும் தேர்தலில் மாற்ற முடியும் என பாஜக நம்புகிறது.
 காங்கிரஸ், மார்க்சிஸ்டுகளுக்கு மாற்றாக தன்னை இம்முறை முன்னிறுத்துகிறது. அக்கட்சிக்கு உறுதுணையாக வெள்ளப்பள்ளி நடேசனின் பாரத தர்மஜன சேனை கூட்டு சேர்ந்துள்ளது. கேரளத்தில் ஈழவ சமுதாயத்தினரிடையே செல்வாக்கு பெற்ற அமைப்பு இது. கேரள காங்கிரஸ் (தாமஸ்) உள்ளிட்ட மேலும் 13 சிறிய கட்சிகள் பாஜக தலைமையில் ஒருங்கிணைந்துள்ளன.
காங்கிரஸ் அணியில் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (மாணி), ஆர்எஸ்பி உள்ளிட்ட 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இடதுசாரி ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சபரிமலை விவகாரத்தால் பாஜக இங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. இம்முறை குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் போட்டியிடும் கும்மனம் ராஜசேகரன், திருச்சூரில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் ஆகியோர் பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள். 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இம்முறை ராகுலின் தாக்கத்தால் 20 தொகுதிகளையும் கைப்பற்றிவிட அவர்கள் திட்டமிடுகின்றனர்.
 ஆளும் கட்சியாக இருப்பதும், சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்பட்டதும் இடதுசாரிகளுக்கு பலவீனமாகி இருக்கிறது.
கேரளத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பு பிரச்னை, சபரிமலை விவகாரம், சிறுபான்மையினரின் விழிப்புணர்வு ஆகியவை இத்தேர்தலில் வெற்றி- தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கும்.

கர்நாடகத்தில் இருமுனைப் போட்டி
கர்நாடகத்தில் 2014 தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக -17, காங்கிரஸ்- 9, மதச்சார்பற்ற ஜனதாதளம்- 2 தொகுதிகளில் வென்றன. இந்தக் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அப்போது காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக இருந்தார். 
2018இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக அணி 106 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வென்றன. யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத நிலையில், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தன; மஜத-வின் குமாரசாமி முதல்வரானார்.
மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், இவ்விரு கட்சிகளிடையே இணக்கமான சூழல் இன்னமும் உருவாகவில்லை. பாஜக எதிர்ப்பு மட்டுமே இக்கட்சிகளை இதுவரை இணைத்து வந்திருக்கிறது. பாஜக தலைவர் எடியூரப்பாவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளால் குமாரசாமி அரசு நிலையில்லாமல் தவிக்கிறது. 
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே தற்காலிக அமைதி நிலவுகிறது.  எனினும் தொகுதிப் பங்கீட்டில் நிலவிய இறுக்கத்தால் (காங்கிரஸ்- 20, ம.ஜ.த-8) தேர்தலில் இரு கட்சியினரிடையே நல்ல தோழமை இல்லை. இது பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது என்று ஊடக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரீஷின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி சுமலதாவை இவ்விரு கட்சிகளும் கண்டுகொள்ளாததால் மாண்டியாவில் அவர் சுயேச்சையாக பாஜக ஆதரவுடன் போட்டியிடுகிறார். அனைவரின் கவனமும் கண்களும் இந்தத் தொகுதியின் முடிவை எதிர்நோக்கியிருக்கின்றன.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் இறந்தது பாஜகவுக்கு பெரும் இழப்பு. அக்கட்சிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கெளடா ஆகியோர் முன்னணித் தலைவர்கள். மீண்டும் முதல்வராகும் கனவுடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த எடியூரப்பா தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, வீரப்ப மொய்லி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவெ கெளடா, முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் முன்னணித் தலைவர்களாக உள்ளனர். 
கூட்டணிக்குள் பரஸ்பர குழி பறித்தல், விவசாயிகள் பிரச்னை, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, காவிரி விவகாரம்,  பல மாவட்டங்களில் வறட்சி,  லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தவரின் ஒருங்கிணைப்பு, மத்திய- மாநில ஆட்சிகள் மீதான அதிருப்தி ஆகியவை இத்தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன.
இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதல் கட்டம் ஏப்ரல் 18 நடைபெற்றது. இரண்டாம் கட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

பிற தென்னக பகுதிகளில்...
25 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அங்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் (175 தொகுதிகள்) இணைந்து நடத்தப்பட்டுள்ளது. 
இத்தேர்தல், மாநில முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும். அவருக்குப் போட்டியாக எழுச்சி பெற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமா என்பது மே 23-இல் தெரியவரும். சென்ற தேர்தலில் பாஜக அணியில் இருந்தபோது 15 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்குதேசம் கட்சி இம்முறை அவற்றைத் தக்கவைக்க முடியுமா என்பதையும் பார்க்கப் போகிறோம்.
17தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிலும் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.  2014 மக்களவைத் தேர்தலில் 17-இல் 12 இடங்களை டிஆர்எஸ் கூட்டணி வென்றது. தெலங்கானா உருவாகக் காரணமானவர் என்பது சந்திரசேகர ராவுக்கு சிறப்பம்சமாக உள்ளது. 
இங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர் ராவ் முதல்வராக  உள்ளார். 2018இல் நடந்த பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 118 தொகுதிகளில் டிஆர்எஸ் 101 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களை வென்றது. இந்தக் கூட்டணியின் செல்வாக்கு தொடருமா என்பதை இத்தேர்தல் முடிவு செய்யும்.
ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் வலுவாக இல்லை. இம்மாநிலங்களில் வெல்லும் கட்சிகள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வழக்கமாக  உள்ளது.
ஒரே மக்களைத் தொகுதியைக் கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ்  ஆட்சி நடக்கிறது. 30 இடங்கள் கொண்ட புதுச்சேரி பேரவையில் ஆளும் அணிக்கு 17 இடங்கள் உள்ளன. 
முதல்வராக நாராயணசாமி உள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் இவர்.  
இங்கு 2014 தேர்தலில் பாஜகவின் தோழமைக் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் வென்றது. வரும் தேர்தலிலும் அக்கட்சி அதிமுக - பாஜக அணியில் போட்டியிடுகிறது. எதிரே திமுக ஆதரவுடன் காங்கிரஸ் களத்தில் உள்ளது. 
யூனியன் பிரதேசங்களான லட்சத் தீவுகளும், அந்தமான்- நிகோபர் தீவுகளும் தலா ஒரு  எம்.பி.யைத் தேர்வு செய்கின்றன. இப்பகுதிகளில் சட்டப்பேரவைகள் இல்லை. துணைநிலை ஆளுநரால் இவை நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. 
2014 தேர்தலில் லட்சத் தீவுகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அந்தமான்- நிகோபர் தீவுகளில் பாஜகவும் வென்றன. இம்முறையும் இங்கு பெருத்த மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. 
2004 தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்ட தென்மாநிலங்களில் பெறும் வெற்றி உதவும் என்பது பாஜகவின் கணக்கு. அதேபோல,  கேரளமும் தமிழகமும் தனது மீட்புக்கு உதவும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இவ்விரு கட்சிகளும் அல்லாதவர்கள் வெற்றி பெறும் இடங்கள் அதிகரித்தால்,  17வது மக்களவையில் அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருக்கும்; பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி உருவாகவும் அது வழிவகுக்கக் கூடும்.
வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது என்பதெல்லாம் பழங்கதை. கல்வி, பொருளாதாரம், சமூக மதிப்பீடுகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் தென்னிந்திய மாநிலங்கள் அரசியல் விழிப்புணர்விலும்  முத்திரை பதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் கூட்டணிகள் யுத்தம்
தமிழகத்தில் அதிமுக தலைவி ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. இங்கு அதிமுக- திமுக இடையே அரசியல் போராட்டம் தொடர்கிறது.
சென்ற தேர்தலில் ஜெயலலிதாவா, நரேந்திர மோடியா என்ற இரு துருவ மோதலில் அதிமுக- 37, பாஜக அணி-3 (பாஜக-1, பாமக- 1, என்ஆர் காங்கிரஸ்-1)  இடங்களில் வென்றன. திமுக கூட்டணியும், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் மோசமான தோல்வியைச் சந்தித்தன. 
அதன்பிறகு 2016-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 232 தொகுதிகளில் 134 இடங்களில் வென்ற அதிமுக ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும் திமுக- காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வென்றது. இது 2011 தேர்தலைவிட 66 இடங்கள் அதிகம்.  
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டதால் பதவி இழந்த 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் காலியான 4 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது. 
 வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி,  நலத்திட்டங்கள், புதிய ஜாதிக் கணக்கீடுகள், இதுவரை இல்லாத சமய விழிப்புணர்வு, உள்ளூர் பிரச்னைகள் ஆகியவை இத்தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com