காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்: மக்களவையில் அமித் ஷா ஆவேசம்

காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாகக் கூறினார்.
காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்: மக்களவையில் அமித் ஷா ஆவேசம்


புது தில்லி: காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாகக் கூறினார்.

மக்களவையில் இன்று ஜம்மு காஷ்மீர் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்து பேசினார்.

மாநிலமாக இருந்த காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவது சட்ட மீறல் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

அப்போது தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் ஆவேசம் அடைந்த அமித் ஷா, காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று கூறினார்.

மேலும் அவர்  பேசுகையில், 370வது பிரிவை மாற்றியமைக்கலாம் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமானது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்துவிடாதீர்கள். 

அரசியல் காரணங்களுக்காக காஷ்மீரை இரண்டாகப் பிரிக்கவில்லை. இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் இது.  காஷ்மீர் தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு அனைத்து உரிமையும் உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்கத் தயார் என்றும் அமித் ஷா கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகின்றன.  

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மசோதாவையும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை கொண்டு வந்தார். 

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும், கடும் அமளிக்கு நடுவே, இது தொடர்பான தீர்மானம் மற்றும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த தீர்மானம் மற்றும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com