
கர்நாடகத்தில் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சி கவிழ மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தான் முக்கிய காரணம் என முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததில் இருந்து நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன். கடந்த 14 மாதங்களில் கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக முழுமனதுடன் பணியாற்றினேன். கடந்த காங்கிரஸ் அரசால் செய்ய முடியாததை செய்து முடித்தேன்.
எனது சொந்த கட்சியின் எம்எல்ஏக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி வரை அனைவருக்கும் ஒரு அடிமை போல் பணியாற்றினேன். முன் அனுமதி பெறாமலேயே அனைத்து பேரவை உறுப்பினர்களும் தாங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் என்னை வந்து சந்தித்தார்கள்.
ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல், தொகுதியின் வளர்ச்சிக்காக அவர்கள் அனைவருக்கும் உரிய மரியாதை அளித்து சந்தித்தேன். அனைவருடைய கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி வைத்தேன். அனைவரும் சிறப்பாக செயல்பட முழுச் சுதந்திரம் அளித்தேன். ஆனால், எனது நற்பணியை யாரும் பாராட்டவில்லை என்ற சிறு மன வருத்தம் உள்ளது.
சாதி, மதம், பணம் ஆகியவற்றின் பலத்துடன் இன்று அரசியல் நடைபெறுகிறது. இங்கே ஒழுக்கம் என்பதே கிடையாது. எனவே அரசியலில் நல்லவர்களால் நீடிக்க முடியாது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்தேன். எனது ஆதாரவாளர்கள் கேட்டுக்கொண்டதால் தொடர்கிறேன்.
எனக்கு தெரிந்தவரை கர்நாடக அரசியலில் பிளவு ஏற்பட்டபோது கூட மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடகத்தில் தொடர வேண்டும் என்று தான் காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதனை விரும்பவில்லை. ஆட்சி கவிழவும் அவர்கள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.