நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நேரில் சென்று கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 4:51 am

DIN

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். ஏற்கெனவே கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய வரலாற்றில் ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஏழை மக்களின் நலனுக்காகவும், பொது வாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தலைவரின் மறைவால் நாடே துயரத்தில் உள்ளது. தனது அன்பினால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நேரில் சென்று கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உடனிருந்தார். 

ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் கடந்த 1953-ஆம் ஆண்டு பிறந்த சுஷ்மா ஸ்வராஜ், 7 முறை நாடாளுமன்ற எம்.பி.யாகவும், 3 முறை எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருந்தார்.

25-ஆவது வயதில் ஹரியாணாவில் அமைச்சர் பொறுப்பேற்று, அந்த மாநிலத்தில் இளம் வயதில் அமைச்சர் பொறுப்பு வகித்த முதல் தலைவராக விளங்கினார். தில்லி முதல்வராக கடந்த 1998-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அதே ஆண்டில் டிசம்பர் வரை பதவி வகித்தார். வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசில் செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.  

1999-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலம், பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார்.

பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த முடிவை அவர் கடந்த நவம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்தார்.

சுஷ்மா ஸ்வராஜுக்கு ஸ்வராஜ் கெளஷல் என்ற கணவரும், பான்சுரி என்ற மகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.