12 கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு: பரிசீலிப்பாரா குடியரசுத் தலைவர்?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மோடி அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு கோரிக்கை வைத்துள்ளது.
12 கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு: பரிசீலிப்பாரா குடியரசுத் தலைவர்?
Published on
Updated on
2 min read


குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மோடி அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு கோரிக்கை வைத்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 12 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர். அவர்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மற்றும் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மோடி அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாரம் யெச்சூரி பேசுகையில், 

"அவருடைய அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதை அவர் அனுமதிக்கக் கூடாது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெற அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் பேசுகையில், 

"இந்தக் கொடூரமான, பிளவுபடுத்தும் சட்டத்தை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவரைக் கேட்டுள்ளோம். இந்தச் சட்டம் ஏழைகளைப் பாதிக்கும். 

சமாஜவாதி தலைவர் ராம் கோபால் தெரிவிக்கையில், 

"இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது, நாங்கள் வெளிப்படுத்திய அச்சம் அனைத்தும் தற்போது சரி என்று நிரூபனம் ஆகியுள்ளது. இந்தச் சட்டம் நாட்டைப் பிரிவினையை நோக்கி அழைத்துச் செல்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நமது அரசு நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதை அனுமதிக்காமல், ஒற்றுமையாக வைத்திருக்குமாறு குடியரசுத் தலைவரை வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில்,

"எங்களுடன் விவாதம் நடத்த பிரதமருக்கு சவால் விடுக்கிறோம். என்னுடம் நேருக்கு நேர் விவாதம் நடத்த சவால் விடுக்கிறேன். அப்போது, நவாஸ் ஷெரிப்பை ஆரத் தழுவியது யார் என்பதைக் குறிப்பிடுவோம். பயங்கரவாதிகளை விடுவித்து, பாகிஸ்தானுக்கு நெருக்கமானவர்களாக இருக்க விரும்பியது யார் என்பது உள்ளிட்டவற்றை குறிப்பிடுவோம். பாகிஸ்தானுக்கு அனுதாபம் காட்டியது அவர்கள்தான். ஆனால் குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சிகளை. விவாதம் நடத்த அவருக்கு சவால் விடுக்கிறோம்" என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவிக்கையில்,

"14 முதல் 15 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க வேண்டியது. ஆனால் ஒரு சில தலைவர்களால் பங்கேற்க முடியவில்லை. அவர்களும் எங்களுடன்தான் உள்ளனர். இந்தச் சட்டத்தைக் கொண்டுவர அரசு அவசரம் காட்டியது தொடர்பான குறிப்பாணையை அவரிடம் அளித்துள்ளோம். இந்தச் சட்டம் மக்களை பிளவுபடுத்துகிறது. இது நாட்டு நலனுக்கானது அல்ல" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com