தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

பாஜகவை வீழ்த்த குறைந்தபட்ச செயல்திட்டம்: எதிர்க்கட்சிகள் முடிவு

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைவோம்; அதற்காக குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்

Updated On :14 பிப்ரவரி 2019, 2:49 am IST


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைவோம்; அதற்காக குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தில்லியில் ஆம் ஆத்மி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, சில மாநிலங்களில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கைகோக்க வேண்டியது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கூட்டத்துக்கு பின், ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவை தோற்கடிக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அந்த செயல் திட்டத்தை, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அங்கு முக்கிய எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் மேற்கண்ட கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இதேபோல், மம்தா கூறுகையில், வரும் நாள்களில் தொடர்ந்து இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. காங்கிரஸுடன் எங்களுக்கு எந்த மோதல் ஏற்பட்டாலும் அது மேற்கு வங்கத்துக்குள் மட்டுமே இருக்கும். அதேசமயம், தேசிய அளவில் பாஜகவை இணைந்து எதிர்ப்போம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.