ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பானதலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை, மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் 2.86 சதவீதம் குறைவான விலையில் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்கு 126 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய பாஜக அரசு கடந்த 2016-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பெற்றுத் தந்ததாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த ஒப்பந்தம் தொடர்பான உண்மை விவரங்களை அறிவதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆய்வு செய்து, விமானப் படை ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பான தணிக்கை அறிக்கை என்ற பெயரில் 157 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. அந்த அறிக்கை, மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
விமான விலை விவரம் இல்லை: அதில், கடந்த 2007-இல் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அளித்திருந்த விலையையும், கடந்த 2016-இல் அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு, அதில் உள்ள நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனினும், விமானங்களின் விலை விவரம் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
விலை ஒப்பீடு: கடந்த 2007-இல் முந்தைய அரசு நிர்ணயித்திருந்த விலையைக் காட்டிலும் 2.86 சதவீதம் குறைவான விலையிலேயே பறக்கும் நிலையில் 36 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதேவேளையில், முந்தைய அரசைக் காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலையில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானதாக, பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதில் உண்மையில்லை.
இந்த ஒப்பந்தத்தில், மொத்தம் 14 வகையான கருவிகளுக்கு தனித்தனியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 7 கருவிகளின் விலை, முந்தைய விலையைக் காட்டிலும் அதிகமாகும். அடிப்படை விமானம் உள்பட 3 கருவிகள் ஒரே விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 3 கருவிகள், முந்தைய விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஒப்படைக்கும் காலம் விரைவு: முந்தைய அரசின் ஒப்பந்தத்தில், ஒப்பந்தம் கையெழுத்தான 50-ஆவது மாதத்தில் 18 போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; அடுத்த 18 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விமானங்கள், ஒப்பந்தம் கையெழுத்தான 72-ஆவது மாதத்துக்குள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய அரசின் ஒப்பந்தத்தில், முதல் 18 விமானங்கள், 36 முதல் 53 மாதங்களில் ஒப்படைக்கப்படும் என்றும், அடுத்த 18 விமானங்கள் 67 மாதங்களில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதி: ரஃபேல் ஒப்பந்தத்துக்காக, பிரான்ஸ் அரசிடம் இருந்து வாக்குறுதிப் பத்திரத்தைப் பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சட்ட அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையை நிராகரித்த பிரான்ஸ் அரசு, வாக்குறுதி கடிதம் மட்டுமே அளித்தது. வாக்குறுதி கடிதம் அளித்ததால், ஒப்பந்தத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால், பிரான்ஸ் அரசு தார்மிக ரீதியில் பொறுப்பேற்கலாம். ஆனால், சட்ட ரீதியில் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், இந்த ஒப்பந்த தொகை தொடர்பான பரிவர்த்தனைகளை, மூன்றாம் நபர் (எஸ்குரோ கணக்கு) கணக்கில் மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் விடுத்த கோரிக்கையை பிரான்ஸ் அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, இரு நாட்டு அரசுகளுக்கு இடையே பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும்.
முந்தைய அரசின் ஒப்பந்தத்தில் 15 சதவீதத் தொகையை நிதி சார்ந்த வாக்குறுதியாக அளிக்க டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் முன்வந்தது. ஆனால், தற்போதைய ஒப்பந்தத்தில் அப்படியான வாக்குறுதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை.
தொழில்நுட்பக் காரணங்கள்: சில தேவையற்ற தொழில்நுட்ப அம்சங்களை அவ்வப்போது சேர்த்ததால், விலையை முடிவு செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் விவகாரம் இடம்பெறவில்லை
சிஏஜி அறிக்கையில், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உதிரி பாக தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. உதிரி பாகங்கள் தயாரிப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் தனியாக ஆய்வு செய்து வருவதாக சிஏஜி தெரிவித்துள்ளது. அதன் வரைவு அறிக்கை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, அந்த அறிக்கை இறுதிசெய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
எழுதப்பட்ட காகிதத்தின் அளவு கூட மதிப்பில்லை: ராகுல் காந்தி
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அமைப்பின் (சிஏஜி) அறிக்கையில், அந்த ஒப்பந்தத்துக்கான பேரத்தில் ஈடுபட்டவர்களது மறுப்புக் குறிப்புகள் இடம் பெறாததால், அந்த அறிக்கை எழுதப்பட்ட காகிதத்தின் அளவுக்குக் கூட அதற்கு மதிப்பில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிஏஜி அறிக்கையில், அந்த ஒப்பந்தத்துக்கான பேரத்தில் ஈடுபட்டவர்கள் எழுதிய மறுப்புக் குறிப்புகள் தொடர்பான விவரங்கள் இடம் பெறவில்லை.
எனவே, அந்த அறிக்கை அரசு ஆவணத்தில் எழுதப்பட்டிருந்தாலும்,அது எழுதப்பட்டுள்ள காகிதத்தின் அளவுக்குக் கூட அதற்கு மதிப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி பெற்றுத் தருவதற்காகவே இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று ஆளும் கட்சியினர் கூறுவது உண்மையென்றால், பிறகு ஏன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
முன்னதாக, ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுடனான சித்தாந்தப் போரில் காங்கிரஸ் கட்சி வென்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பொதுக் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பொய்கள் அம்பலம்: அருண் ஜேட்லி
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலமாக, அந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய பொய்கள் அனைத்தும் வெளிப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை மாநிலங்களவையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தியா-பிரான்ஸ் இடையே முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட போர் விமான ஒப்பந்தத்தை விட, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ரஃபேல் போர் விமானங்களின் விலை மதிப்பு 2. 86 சதவீதம் குறைவு என்று கூறப்பட்டிருந்தது.
அதைக் குறிப்பிட்டு சுட்டுரையில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், உச்சநீதிமன்ற தீர்ப்பு, சிஏஜி ஆகியவை தவறு என்றும், காங்கிரஸில் உள்ள குடும்பத்தினர் சொல்வதுதான் சரியென்றும் பேசினர். ஆனால் தற்போது சிஏஜி அறிக்கை மூலமாக காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்து பொய்களும் அம்பலமாகியுள்ளன. வாய்மையே வெல்லும் . உண்மை எப்போதும் நிலைநாட்டப்படும். நாட்டு மக்களுக்கு எப்போதும் பொய்யான தகவல்களை அளித்து வந்த அவர்களை ஜனநாயகம் எப்படி தண்டிக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


