

புது தில்லி: யூசுஃப் அஸார் என்கிற மொஹம்மது சலீம் என்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, இந்திய விமானப் படை நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தால்?
உண்மையில் அது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படும். ஏன் எனில்.. அவ்வளவுக் காரணங்கள் உள்ளன.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த பாலாகோட் என்ற இடத்தில் பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்திய விமானப் படையினர் நேற்று தாக்கி அழித்தனர்.
இதில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி யூசுஃப் அஸார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
யூசுஃப் அஸார், 1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன் விமானம் ஐசி 814 கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாவார். இவர் ஜே-இ-மு அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் மைத்துனரும் கூட.
இந்திய விமானத்தைக் கடத்திச் சென்ற சம்பவத்தில், விமானத்தில் இருந்த 179 பயணிகளையும், 11 ஊழியர்களையும் விடுவிப்பதற்காக இந்திய அரசு மிகப் பாடுபட்டுப் பிடித்த ஜெ-இ-மு அமைப்பின் நிறுவனர் மௌலானா மசூத் அஸார், அகமது ஒமர் சயீத் ஷேக், முஷ்டாக் அகமது ஸர்காரி ஆகியோரை விடுதலை செய்தது.
2002ம் ஆண்டு இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபடும் மிக மோசமான பயங்கரவாதிகள் 20 பேரின் பட்டியலை இந்தியா, பாகிஸ்தானிடம் அளித்தது. அதில் யூசிஃபின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதில் உஸ்தாத் கௌரி என்றும் அவர் அழைக்கப்படுவதை இந்தியா குறிப்பிட்டிருந்தது.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொலைபேசியில் அவ்வப்போது உஸ்தாத் உஸ்தாத் என்று கூறிய வார்த்தைகள் பதிவாகியிருந்தது.
2000ஆவது ஆண்டு விமானக் கடத்தல், மனிதர்களை கடத்துதல், கொலை செய்த குற்றத்தின் கீழ் யூசுஃப்குக்கு எதிராக சிபிஐ ரெட் நோட்டீஸ் பிறப்பித்தும், பாகிஸ்தான் இதுவரை அவரை கைது செய்யவில்லை.
கராச்சியில் பிறந்த யூசுஃப் உருது, ஹிந்தி மொழிகளில் சரளமாகப் பேசுவார். இந்தியாவில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து வழி நடத்துவது பெரும்பாலும் யூசுஃப்தான்.
இந்திய தரப்பில், பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல்களில் மறைமுகமாக யூசுஃப் அஸாரின் பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஜெ-இ-மு பயங்கரவாத அமைப்பு நடத்திய பல தாக்குதல்களின் விசாரணையில் யூசுஃப் அஸாரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பு நடத்திய ஆய்வில், ஜெ-இ-மு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 300 பயங்கரவாதிகளும், 25 பயங்கரவாதத் தலைவர்களும், புல்வாமா தாக்குதல் வெற்றியைக் கொண்டாடவும், அடுத்த சதித் திட்டம் குறித்து ஆலோசிக்கவும் பாலாகோட் முகாமில் குவிந்திருந்ததாகக் கூறுகிறது. அப்போதுதான் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நேற்றைய தாக்குதல் ஜெ-இ-மு பயங்கரவாத அமைப்புக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய அடியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.