ரஃபேல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில்  வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில், புதனன்று  சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  
ரஃபேல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  

புது தில்லி: ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில்  வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில், புதனன்று  சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

அதைத்தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதியன்று தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள், ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று தெரிவித்துள்ளனர். எனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஒப்பந்தத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் அதனை விசாரித்தது. அதில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான கொள்கை முடிவு, தொகை, ஒப்பந்ததாரர் ஆகிய அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. விசாரணை முடிவில் மத்திய அரசின் ஒப்பந்தம் சரியானதுதான் என்று தெரிய வந்துள்ளது.

வணிக ரீதியாக எந்த சலுகையும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, ரஃபேல் ஒப்பந்தம் சரியானதுதான், திருப்தி அளிக்கிறது என்று தெரிய வந்திருப்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது. 

இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில்  வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில், புதனன்று  சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, மற்றும் அருண் சௌரி ஆகிய மூவர் தரப்பில் 31 பக்க சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com