
பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு சிறையில் விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக அப்போதைய டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் தீர்க்கமாக மறுத்தனர்.
எனவே இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தருவதற்காக ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவானது சிறையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை கடந்த நவம்பரில் கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு மாநில அரசு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. இருந்தாலும் அறிக்கை விவரங்கள் அப்போது வெளியிடப்படவில்லை.
தற்போது அறிக்கை விவரங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சசிகலாவுக்கும். இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்றும், சசிகலா சிறையில் தனியாக சமைத்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆடை அணிவதிலும், பார்வையாளர் சந்திப்பு நேரங்களிலும் கடுமையான விதி மீறல்கள் நடந்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.