உலகிலேயே இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கு மட்டும் தாங்க இந்த பெருமை உண்டு!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை மட்டும் அல்ல, பொதுத் தேர்தலுக்கு அதிகம் செலவிடும் நாடு என்ற பெருமையையும் விரைவில் இந்தியா பெற உள்ளது.
உலகிலேயே இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கு மட்டும் தாங்க இந்த பெருமை உண்டு!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை மட்டும் அல்ல, பொதுத் தேர்தலுக்கு அதிகம் செலவிடும் நாடு என்ற பெருமையையும் விரைவில் இந்தியா பெற உள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 வார காலத்துக்கு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு என்பது வெறும் நிலப்பரப்பில் மட்டும் அல்லாமல் வடக்கே உயர்ந்த ஹிமாலய மலைப் பகுதிகளிலும், தெற்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், மேற்கே தார் பாலைவனப் பகுதியிலும், கிழக்கே மாங்ரோவ் காடுகளுக்கு இடையேயும் நடைபெற வேண்டிய விஷயமாகும்.

ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு ஆகவிருக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? இளகிய மனம் படைத்தோர் மெதுவாக இதனைப் படிக்காமல் அடுத்த பத்திக்குச் சென்றுவிடலாம். தைரியமான மனம் கொண்டவருக்கு மட்டும் சொல்கிறோம், சுமார் 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்று குழம்ப வேண்டாம். ரூ.50,000,00,00,000.

இது அமெரிக்க டாலர் மதிப்பில் 7 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வெறும் 6.5 பில்லியன் டாலர் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது செலவிடப்பட்டதை விட தற்போது 40 சதவீதம் செலவினத் தொகை அதிகரித்துள்ளது.

தில்லியைச் சேர்நத மீடியா ஸ்டடிஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

சமூக வலைத்தளங்களுக்காக கட்சிகளும், வேட்பாளர்களும் அதிகம் செலவிடுவதும், போட்டியாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க செலவினமும் அதிகரிப்பதுமே இதற்குக் காரணம்.

அதாவது  இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு (மொத்தம் 545) சுமார் 8000 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதனால் வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். லஞ்சம் கொடுத்தால் நிச்சயம் வாக்குகளைப் பெற முடியும் என்பதிலும் உறுதியில்லை. வாக்காளர்களுக்கு பரிசுகளை வழங்குவதும், இந்திய தேர்தல் கலாசாரத்தில் பல ஆண்டுகாலமாக இருந்து வரும் வழக்கமாகும்.

தொலைக்காட்சி முதல் சில இடங்களில் ஆடுகளைக் கூட வாக்காளர்களுக்கு பரிசாக அளிக்கிறார்கள். கர்நாடகாவில் கடந்த ஆண்டு பேரவைத் தேர்தலின் போது பல கோடி ரூபாய் ரொக்கப் பணம், தங்க நகை, மதுபானம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்திருந்தது.

இதுபோல பொதுக்கூட்டம், பேரணி, போக்குவரத்து செலவு, தொண்டர்களுக்கான செலவு என வரும் மக்களவைத் தேர்தலில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பொதுத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு சுமார் 200 கோடியளவுக்கு பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், மலைப் பகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை யானைகள் மீது ஏற்றிச் செல்லவும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வாக்குச்சாவடிக்கு பிரம்மபுத்திரா ஆற்றை படகு மூலம் கடந்து மின்னணு இயந்திரங்களைக் கொண்டு செல்லவும் ஆகும் செலவும் அடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com