
ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியைக் கொலை செய்ய எனக்கு ஒப்பந்தம் அளியுங்கள் என்று முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணாவின் ரேவாரி நகரில் உள்ள திரிவேணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் யாதவ் (வயது 31). இவர் அங்கு புத்தக கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான பதிவொன்றை கடந்த மார்ச் 26ந்தேதி பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், 'பிரதமர் மோடியை கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தினை எனக்கு வழங்க யாரேனும் தயாராக இருக்கிறீர்களா? அதற்கான தெளிவான செயல் திட்டம் என்னிடம் உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த தகவல் மாநில சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிய வந்ததும் அவர்கள் நவீனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதமர் மற்றும் மத்திய அரசின் பணிகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. பிரதமருடன் எனக்கு கொள்கை அளவிலான வேறுபாடுகள் உள்ளது. எனவேதான் முகநூலில் அப்படி ஒரு பதிவை வெளியிட்டேன். பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த பதிவை நீக்கி விட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் அவர் இப்படியான பதிவுகளை வெளியிட்டுள்ளதை அறிந்த போலீசார் நவீன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.