மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'ஹிந்து தீவிரவாதி' சர்ச்சை: கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு, தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :16 மே 2019, 10:27 am

DIN

புது தில்லி: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு, தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டார்கள்.

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதைச் சொல்கிறேன். ஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே  என்றார்.

அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் பிரசாரம் செய்ய தடைகோரியும், அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள. முன்ஜாமீன் கேட்டு கமல் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும் கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 'ஒரு ஹிந்து எப்போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது' என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.  

அதையடுத்து கமலுக்கு எதிராக 'ஹிந்து சேனா' என்ற அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கு மே 16 ஆம் தேதி மதியம் 2.30 க்கு விசாரிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு, தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கானது வியாழன் மதியம் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் விஷ்ணு குப்தாவிடம் ஏன் இந்த விவகாரத்தில் நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, 'அடிப்படையில் நான் ஒரு ஹிந்து; எனது மதத்திற்கு எதிராக ஒரு அவதூறு கருத்து பரப்பப்படும்போது அதை எதிர்ப்பது எனது கடமை' என்று அவர் தெரிவித்தார்.

அதையடுத்து கமல் அவ்வாறு பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு, விஷ்ணு குப்தாவிற்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.     

அதனை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றமானது, அன்றைய தினமே அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொள்வதாக வும் அறிவித்தது.

அதையடுத்து கமலுக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.