சந்திரயான்-2 விண்கலம்: லேண்டர் விக்ரம் தரையிறங்கும் அந்த திக் திக் 15 நிமிடங்கள்!

நிலவின் பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் லேண்டர் விக்ரம் தரையிறக்கப்பட உள்ளது. 
சந்திரயான்-2 விண்கலம்: லேண்டர் விக்ரம் தரையிறங்கும் அந்த திக் திக் 15 நிமிடங்கள்!
Published on
Updated on
2 min read


நிலவின் பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் லேண்டர் விக்ரம் தரையிறக்கப்பட உள்ளது. 

பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, இந்த சாதனை முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். அந்த மையத்தில் மாணவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் காண உள்ளார். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 2 மாணவர்கள் தேர்வு செய்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதில் விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி சுற்றிவந்துகொண்டிருக்கும் ஆர்பிட்டர் பகுதி தொடர்ந்து ஓராண்டுக்கு நிலவைச் சுற்றி வந்தபடி ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 

நிலவில் தரையிறங்கும் லேண்டர் மற்றும் அதிலிருந்து இறங்கி நிலவின் பரப்பில் 500 மீட்டர் வரை நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ள ரோவர் பகுதி ஆகிய இரண்டும் 14 நாள்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளன.

மிக முக்கியமான தருணத்துக்காக காத்திருக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் இது பற்றி கூறுகையில், நிலவின் தரைப்பரப்பில் லேண்டர் இறங்கும் வரை அது சரியாக இயங்குகிறதா என்று விஞ்ஞானிகள் சோதித்துக் கொண்டே இருப்பார்கள்.

நிலவின் தரைப்பகுதியில் இருந்து லேண்டர் இருக்கும் உயரம், அது எங்கிருக்கிறது என்ற தகவல் போன்றவற்றை அரை டஜனுக்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் மூலம் அடுத்த 3 நாட்களுக்கு தரைப் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.

நிலவின் தென்துருவத்துக்குள் லேண்டர் நுழையும் போது அதன் வேகம் ஒரு நொடிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் இருக்கும். குறிப்பிட்ட இலக்கை அடைந்த பிறகு அதன் வேகம் மெதுமெதுவாகக் குறைக்கப்படும்.

நிலவின் தரைப் பகுதியில் லேண்டர் தரையிறங்கும் அந்த 15 நிமிடங்கள்தான் மிகவும் கடினமான நேரமாக இருக்கும்.

நிலவின் தரைப் பகுதியில் லேண்டர் இறங்கியதும் உடனடியாக அது இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பும். லேண்டர் தரையிறங்கிய இடம் தடைகளற்ற பகுதியா, அதனால் எளிதாக நகர முடியுமா என்பதை அந்த புகைப்படங்களைக் கொண்டே ஆய்வு செய்ய முடியும். ஒருவேளை தரையிறங்கும் பகுதி கரடுமுரடாக இருந்துவிட்டால், லேண்டரின் நகர்வில் சிக்கல் ஏற்படலாம். 

அது மட்டுமல்ல, நிலவில் இருக்கும் தூசுப் படலமும் லேண்டர் தரையிறங்கி வெற்றிகரமாகப் பணியாற்றுவதற்கு மற்றொரு தடைக்கல்லாக இருக்கலாம். லேண்டரில் இருக்கும் ரோவர் அதனுள் இருந்து இறங்கி வெளியேறி நகர்ந்து பூமியின் கணக்குப்படி 14 நாட்கள் நிலவில் ஆய்வுகளை நடத்த உள்ளது என்று சிவன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com