ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்த பிரதமர் மோடி. உடன், மாநில ஆளுநர் திரெளபதி முர்மு, முதல்வர் ரகுவர் தாஸ்.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்த பிரதமர் மோடி. உடன், மாநில ஆளுநர் திரெளபதி முர்மு, முதல்வர் ரகுவர் தாஸ்.

விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் தொடக்கம்

சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.


சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம், வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி, ராஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: இதுவரை கண்டிராத அதிவேக வளர்ச்சியை நாடு கண்டுவருகிறது. இவை வெறும் முன்னோட்டம் மட்டுமே. இனிவரும் காலங்களில்தான் நாடு முழு வளர்ச்சியைக் காணவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு, நாட்டில் ஊழலை ஒழிக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் உறுதி கொண்டுள்ளது; நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்கவும், முஸ்லிம் சகோதரிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியேற்றுள்ளது.
ஊழலில் ஈடுபட்ட சிலர், ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். தங்களை சட்டத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், ஜாமீன் பெறுவதற்காகத் தற்போது நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான பணிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் முதல் 100 நாள்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டன.  பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஜார்க்கண்டில் தொடக்கி வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏழைகள் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு நலத் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்கான அடித்தளமாக ஜார்க்கண்ட் விளங்கி வருகிறது. உலகின் மிகப் பெரும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜார்க்கண்டில்தான் தொடக்கி வைக்கப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 44 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
தற்போது, வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டமும் இதே மண்ணிலிருந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன; மேலும் 2 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. உஜ்வலா திட்டத்தின் மூலம் 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.

வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயதுக்குள்பட்ட சிறு வியாபாரிகளும், சில்லறை வணிகர்களும் பயன்பெறுவர். அவர்கள் 60 வயதை அடைந்தவுடன் மாதம் ரூ.3,000 பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுயதொழில் மேற்கொள்வோருக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

புதிய சட்டப்பேரவை கட்டடம்
ஓய்வூதியத் திட்டம் தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னதாக, ராஞ்சியில் புதிதாக எழுப்பப்பட்ட மாநில சட்டப்பேரவைக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தக் கட்டடம் ரூ.465 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. காகிதப் பயன்பாடு இல்லாத முதல் சட்டப்பேரவையாக இது விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார். இது ரூ.1,239 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.

சரக்கு முனையம்
சாஹிப்கஞ்சில் கங்கை நதிக் கரையில், சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்வதற்கான புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதில், 2 சரக்குக் கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். மேலும், இந்த முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சரக்கு கையாள முடியும்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தச் சரக்கு முனையம் ஜார்க்கண்டுக்குப் புதிய அடையாளமாகத் திகழும். இதன் மூலம் வட கிழக்கு மாநிலங்களுடனும், வங்கதேசம், நேபாளத்துக்கும் எளிதில் வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள 462 ஏகலைவன் மாதிரிப் பள்ளிகளுக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார். அவற்றில் 69 பள்ளிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com