எடியூரப்பா எதிர்கொள்ளும் சவால்கள்!

கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ள நிவாரண உதவி கேட்டு பிரதமர் மோடியை சந்திக்க 10 முறை முயற்சித்தும், முதல்வர் எடியூரப்பாவால் சந்திக்க இயலவில்லை.
எடியூரப்பா எதிர்கொள்ளும் சவால்கள்!
Updated on
3 min read

கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ள நிவாரண உதவி கேட்டு பிரதமர் மோடியை சந்திக்க 10 முறை முயற்சித்தும், முதல்வர் எடியூரப்பாவால் சந்திக்க இயலவில்லை. இதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், மஜத தலைவர்கள் எடியூரப்பாவை கையறுநிலை முதல்வர் என்று வர்ணித்துள்ளனர்.

பெங்களூரு,: கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக மத்திய அரசு  இதுவரை நிதி ஒதுக்கவில்லை. இதனால்,  முதல்வர் எடியூரப்பாவுக்கு சவால்கள் காத்திருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 28 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது.

காங்கிரஸ், மஜத, பாஜக ஆதரவு சுயேச்சைக்கு தலா ஒரு தொகுதி கிடைத்தது. இதன்பிறகு, காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உதவியால் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

எடியூரப்பாவுக்கு சிக்கல்: இதற்கு வேராகவும், விழுதாகவும் இருந்ததால், நீண்ட யோசனைக்குப் பின்னர் எடியூரப்பாவை பாஜக மேலிடம் முதல்வராக்கியது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தபோதும், உடனடியாக முதல்வராகப் பதவியேற்க எடியூரப்பாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அமைச்சரவையைச் சொந்தமாக அமைத்துக் கொள்ள முடியவில்லை. கட்சி மேலிடத்தின் பரிந்துரையால் அமைச்சரானவர்களுக்கு துறைகளை ஒதுக்க முடியவில்லை.

கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்து சமுதாயத்தின் தன்னிகரில்லா தலைவராக விளங்கும் எடியூரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக கோவிந்த்கார்ஜோள், அஸ்வத்நாராயணா, லட்சுமண் சவதி ஆகிய 3 பேரை துணை முதல்வர்களாக கட்சி மேலிடம் நியமித்தது. தான் பரிந்துரைத்த அரவிந்த் லிம்பாவளிக்கு பதிலாக நளின்குமார் கட்டீலை பாஜக மாநிலத் தலைவராக நியமித்து, எடியூரப்பாவை அடக்கி வாசிக்க உத்தரவிட்டது.

காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களுக்கு அரசியல் அடைக்கலம் தருவது தொடர்பாக எடியூரப்பாவுடன் பேச பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மறுத்து விட்டதுடன், கட்சியிலும், ஆட்சியிலும் எடியூரப்பாவின் அதிகாரங்களை வரையறுத்து விட்டார்.

அன்றைய முதல்வரும், இன்றைய முதல்வரும்...: இந்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக கர்நாடகத்தில் ஜனவரி மாதம் முதல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அப்போது ஆட்சி நடத்தி வந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசையும், அதன் முதல்வராக இருந்த எச்.டி.குமாரசாமியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஜனவரி 12-ஆம் தேதி பீதரில், "சில மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தபோதும், காங்கிரஸ் கொடுத்து வரும் நெருக்கடியால் முதல்வர் குமாரசாமி, எழுத்தரைப் போல செயல்பட்டு வருகிறார்' என்றார் பிரதமர் மோடி.

இதையடுத்து, பிப்ரவரி 10-ஆம் தேதி ஹுப்பள்ளியில் பேசுகையில், "நான் கண்டவரை உங்கள் (கர்நாடக) முதல்வர் தான் உதவியற்ற நிலையில் இருப்பவர். மேலும், மாநிலத்தில் யார் (காங்கிரஸ்) ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. இந்த கையாலாகாத ஆட்சியை தூக்கியெறிய வேண்டியது அவசியமாகும். முடிவுகள் எங்கோ எடுக்கப்படுவதால், முதல்வர் (குமாரசாமி) கண்ணீர்விட்டு அழுகிறார். இதைத் தான் நாட்டுக்கு அவர்கள் (காங்கிரஸ்) வழங்கியிருக்கிறார்கள்' என்று விமர்சித்திருந்தார்.

விவசாயிகளுக்கு பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக அப்போதைய முதல்வர் குமாரசாமி அளித்திருந்த வாக்குறுதியை உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் விமர்சித்த பிரதமர் மோடி, "விவசாயிகளுக்கு பயிர்க் கடனை தள்ளுபடிசெய்வதாக கூறிவிட்டு, கர்நாடகத்தில் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு, அதை செய்யாமல் விவசாயிகளை தவிக்க விட்டுள்ளது' என்று கூறியிருந்தார்.

இதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தானா, பாஜகவுக்கு பொருந்தாதா என்று மக்கள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றதும், "பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகமாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கைக்கு தகுந்தபடி ஆட்சி நடத்துவேன். ஆறரை கோடி கர்நாடக மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். கூட்டணி ஆட்சிக்கும், எனது ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை அடுத்த 3 மாதங்களில் உணரும் வகையில் ஆட்சியை நடத்துவேன் என எடியூரப்பா உறுதி அளித்திருந்தார்.

மத்திய அரசிடம் நிவாரண கோருவதில் பிரச்னை: இந்தச் சூழ்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை கர்நாடக வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்தது. ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால் 22 மாவட்டங்களின் 104 வட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. 108 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ளத்தில் 87 பேர் உயிரிழந்தனர். சொந்த இடங்களில் இருந்து 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

மாநில அரசு அமைத்திருந்த 1,465 மறுவாழ்வு மையங்களில் 4.6 லட்சம் மக்கள் தஞ்சம் அடைந்தனர். வெள்ளத்தில் 2.3 லட்சம் வீடுகள் தரைமட்டமாகின. 1.79 லட்சம் வீடுகள் மோசமாக சேதமடைந்தன. 7.82 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக நாசமாயின. நிலச்சரிவில் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாழாயின. 2,828 பாலங்கள், 57 ஆயிரம் மின் கம்பங்கள், 14,076 மின்மாற்றிகள், 3,724 மின் இணைப்புகள், 35 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் முழுமையாக சீரழிந்துள்ளன.

கர்நாடக அரசு மேற்கொண்ட முதல்கட்ட மதிப்பீட்டில், ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். உண்மையில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பொருள்சேதம் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ரூ.309 கோடியை மட்டும் மாநில அரசு விடுவித்துள்ளது. வீடிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், வீடு சேதமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்ட உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் எடியூரப்பா முறையிட்டுள்ளார்.

சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண பெங்களூருக்கு கடந்த 7-ஆம் தேதி வந்த பிரதமர் மோடியை வரவேற்றபோதும், வெள்ள நிவாரண நிதியுதவி குறித்து முதல்வர் எடியூரப்பாவால் விவாதிக்க இயலவில்லை.

 எதிர்க்கட்சிகளின் விமர்சனமும், எடியூரப்பாவின் பதிலும்...:

கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ள நிவாரண உதவி கேட்டு பிரதமர் மோடியை சந்திக்க 10 முறை முயற்சித்தும், முதல்வர் எடியூரப்பாவால் சந்திக்க இயலவில்லை. இதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், மஜத தலைவர்கள் எடியூரப்பாவை கையறுநிலை முதல்வர் என்று வர்ணித்துள்ளனர்.
கர்நாடக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அது தொடர்பாக சுட்டுரையில் எதையும் தெரிவிக்காத பிரதமர் மோடி, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒரு பைசாவையும் ஒதுக்காதது, மக்களின் நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லாததையே காட்டுவதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்திருந்தார். வெள்ள நிவாரண நிதியுதவி வழங்காததைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது கர்நாடகத்தின் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ், மஜத கட்சிகள் விமர்சித்துள்ளன. 

"மத்திய அரசிடம் இருந்து சில நாள்களில் நல்ல செய்தி வரும்' என்று கூறிக்கொண்டே வரும் முதல்வர் எடியூரப்பாவால், காங்கிரஸ், மஜதவின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். கட்சியிலும், ஆட்சியிலும் தனது ஆளுமையை தடுக்க காரணமாகியுள்ள பாஜக மேலிடத் தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள எடியூரப்பா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்காததால் ஆத்திரமடைந்துள்ள வட கர்நாடக மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

3 மாதங்களில் மாறுபட்ட ஆட்சியை வழங்குவதாக கூறியிருந்த முதல்வர் எடியூரப்பா, மக்கள் செல்வாக்கை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com