கர்நாடகத்தில் உயிரித் தொழில்நுட்ப தொழில் கொள்கை

கர்நாடகத்தில் புதிய தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப தொழில் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் உயிரித் தொழில்நுட்ப தொழில் கொள்கை


கர்நாடகத்தில் புதிய தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப தொழில் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
 பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியது: 
மாநிலத்தில் அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையிலும்,  வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் விரைவில் புதிய தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் தொழில் கொள்கை அமல்படுத்தப்படும்.  பெங்களூரை அடுத்து மாநிலத்தின் முக்கிய நகரங்களான மைசூரு, மங்களூரு, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி உள்ளிட்ட நகரங்களிலும் தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தரும் வகையில், மாநிலத்தில் புத்தாக்க ஆணையம் தொடங்கப்படும்.  இதன் தலைவராக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா செயல்படுவார். மாநிலத்தில் தொழில் துறையை மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகளை,  தொழில் துறையினர் வழங்க வேண்டும்.  சிறந்த ஆலோசனைகளைச் செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ளும். தேசிய அளவில் வளர்ச்சி சார்ந்த மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. 230 பில்லியன் டாலர் பொதுத்துறை வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தகவல், உயிரி, வாகன உற்பத்தி, ஜவளி, ஆயத்த ஆடை உற்பத்தி, பெரும் பொறியியல் தொழில்களிலும் கர்நாடகம் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. முதலீடு செய்யும் மாநிலங்களில் மகாராஷ்டிரம், தில்லியை தொடர்ந்து 3-ஆவது மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. 
2000 முதல் 2018 -ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் 35.69 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் முதலீடு செய்வதற்கு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்குபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக உள்ளது என்றார். 
நிகழ்ச்சியில்,  துணை முதல்வர் அஸ்வத் நாராயணா,  தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com