பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியதில்லை: நிதின் கட்கரி

பேட்டரி வாகனங்களை முழுவீச்சில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய தேவையில்லை; பேட்டரி வாகனப் பயன்பாடு
பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டியதில்லை: நிதின் கட்கரி


பேட்டரி வாகனங்களை முழுவீச்சில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய தேவையில்லை; பேட்டரி வாகனப் பயன்பாடு தானாகவே அதிகரிக்கத் தொடங்கிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
முன்னதாக நீதி ஆயோக் அளித்த அறிக்கையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் முழுமையாக பேட்டரி வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இடமிருக்காது என்று கூறப்பட்டிருந்தது. இதனால், வாகனத் துறையை நம்பியிருக்கும் பிற துறையினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவும், வாகன விற்பனை மந்தமாக முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் கட்கரி பேசியதாவது: புதிய தொழில்நுட்பம் வரும்போது பழைய தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்து மறைந்துவிடுவது வழக்கமானதுதான். இந்த நூற்றாண்டில் மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. அதற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் பேருந்துகள் அனைத்தும் பேட்டரிகள், பயோ எரிபொருள், சிஎன்ஜி உள்ளிட்டவற்றில்தான் இயங்கும். டீசல் பேருந்துகள் இருக்காது.
பேட்டரி வாகனங்களை அதிகம் பயன்பாட்டில் கொண்டு வர பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. கால ஓட்டத்தில் மக்களே விரும்பி பேட்டரி வாகனங்களுக்கு மாறிவிடுவார்கள். டீசலுடன் ஒப்பிடும்போது, பேட்டரி வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறைவுதான். அத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் இருக்காது. இதன் காரணமாகவே பேட்டரி வாகனங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அவற்றை அதிக அளவில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கும்போது மிகவும் சிக்கனமானதாக மாறிவிடும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மூலதனச் செலவுகள் அதிகமாகிறது. அதனைக் குறைக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, இத்தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com