மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு 

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது என்று கோரி  உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு 

புது தில்லி: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது என்று கோரி  உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. 

மேக்கேதாட்டு அணை  விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தொடர்பான அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு நவமபர் மாதம் 30-ஆம் தேதியும், புதுச்சேரி அரசு டிசம்பர் 8-ஆம் தேதியும் மனு தாக்கல் செய்தன. மேலும், மத்திய, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தொடுத்தது.

தமிழகம், புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்களில், மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பாக 22-ஆம் தேதியிட்ட கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில்டிசம்பர் 12-ஆம் தேதியன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே ஆஜராகி, மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இச்செயல் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, அந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் உதய ஹோல்லா, இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம், சில கட்டுப்பாடுகளுடன்தான் அனுமதி அளித்துள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படும். இந்த விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் வகையில் உள்ளதா? என்பது ஆராயப்படும். இந்த அனுமதி விவகாரம் தற்போது தொடக்க நிலையில் இருப்பதால், உடனடியாக எதுவும் நடந்துவிடாது. இந்த விவகாரத்தில் தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பாக மத்திய அரசும், கர்நாடக அரசும் ஜனவரி 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது என்று கோரி  உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. 

சுமார் 20 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மனுவில் கரநாடகம் கூறியிருப்பதாவது:

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனுவை விசாரிக்கக் கூடாது. முதலில் இந்த மனுவானது விவசாரணைக்கு ஏற்பதற்கே தகுதியானதல்ல. 

இந்த மனுவினை விவசாரணைக்கு ஏற்பது என்பது காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களை உண்டாக்கும். 

அத்துடன் அந்த மனுவில் நிறைய பொய்யான விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு தெரிவித்துள்ள கர்நாடக மாநில அரசு, இந்த மனுவினை பிரமாணப் பத்திரமாகக் கூட நீதிமன்றம் கருதலாம் என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com