
மும்பை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கும் மராத்தியர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் கடந்த ஆண்டு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதையடுத்து இதுகுறித்து ஆய்வுசெய்ய எம்.ஜி.கெய்க்வாட் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது மராத்தியர்கள் கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய சமூகம் என்று ஆய்வின் அடிப்படையில் அறிக்கை அளித்தது.
இதையடுத்து கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வாதங்கள் முடிவடைந்து வியாழனன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கையின்படி, ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மைகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதால், இதுசெல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.