
புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58, 000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது.
அதேசமயம், ரஃபேல் விமானத்தின் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் ஒப்புக் கொண்டது.
மறுஆய்வு மனுக்கள் மட்டுமன்றி, ரஃபேல் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் புதனன்று விசாரிக்கப்பட உள்ளதாகாத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மனுக்களனைத்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேனுகோபால் கூறியதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்தை நடத்த அமைக்கப்பட்டிருந்த இந்திய பேச்சுவார்த்தைக் குழுவினரின் மாறுபட்ட கருத்துக்கள் அடங்கிய கோப்புககள் ஊடகங்களில் வெளியாகின. இவை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள். அனால் இவை பாதுகாப்புத் துறையில் இருந்து திருடப்பட்டுள்ளன. அவற்றைத் திருடியது தற்போது பணியில் உள்ளவர்களா அல்லது முன்னாள் ஊழியர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தெரிவித்த வேணுகோபால் இதுதொடர்பான மனுக்களை விரைந்து தள்ளுபடி செய்யய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 'பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் முறை ஆங்கில செய்தித்தாள் ஒன்றில், இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து செய்தி வெளிவந்த சமயத்தில், அவை அதிகாரப்பூர்வமற்ற ஆவணங்கள் என்றால் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பாதுகாப்புத் துறையில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.