மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும்? உச்ச நீதிமன்றம் பதிவு செய்திருக்கும் விஷயங்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டிருக்கும் தேவேந்திர ஃபட்னவீஸ், புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
maharashtra assembly
maharashtra assembly


புது தில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டிருக்கும் தேவேந்திர ஃபட்னவீஸ், புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)-காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை மட்டும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. அதனை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியம்சங்கள்..

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எத்தனை எம்எல்ஏக்ளின் ஆதரவு உள்ளது என்பதை சட்டப்பேரவையில் பட்னவீஸ் அரசு நிரூபிக்க வேண்டும்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வசதியாக, இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்.

அவையின் மிக மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும்.

நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை விடியோ பதிவு செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தின் மாண்புகளை காக்க நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன.

ஜனநாயக மாண்புகளைக் காக்கும் பணி அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.

நாளை மாலை 5 மணிக்குள் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக் கூடாது.

நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட வேண்டும்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்து நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, ஃபட்னவீஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பின்னணி: 
மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரி சனிக்கிழமை காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அதற்கு முன்னதாக, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மாலை கூட்டாக மனு தாக்கல் செய்தன.

அந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது.

அப்போது, தேவேந்திர ஃபட்னவீஸுக்கு அழைப்பு விடுத்து ஆளுநா் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரிஆளுநரிடம் ஃபட்னவீஸ் சமா்ப்பித்த கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு திங்கள்கிழமை காலை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இதுதொடா்பாக, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு, தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜித் பவாா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் திங்கள்கிழமையும் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று காலை தீர்ப்பை வழங்குவதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், நாளை (புதன்கிழமைஸ்ரீ மாலை 5 மணிக்குள் ஃபட்னவீஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com