'மகாராஷ்டிரத்தில் ஒரே புலிதான், அது சரத் பவார்தான்!'

மகாராஷ்டிரத்தில் ஒரே புலிதான், அது சரத் பவார்தான் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் ஒரே புலிதான், அது சரத் பவார்தான் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.

மகாராஷ்டிரத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை முறையே தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் இன்று (செவ்வாய்கிழமை) ராஜிநாமா செய்தனர். இதன்மூலம், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. இந்தக் கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் டிரைடெண்ட் ஹோட்டலில் கூட்டு ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். மூன்று கட்சிகளின் தலைவர்கள் வருவதற்கு முன் அக்கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே, ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் அடுத்தடுத்து ஹோட்டலுக்கு வந்தடைந்தனர். 

இதில் சரத் பவாரின் வருகையின்போது, "மகாராஷ்டிரத்தில் ஒரே புலிதான், அது சரத் பவார்தான்" என தொண்டர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பினர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவிக்கையில், "இன்றைய கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்கமாட்டார்" என்றார்.

இதையடுத்து, சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் -  காங்கிரஸ் கூட்ணியை அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிதின் ரௌத் ஆகியோர் அதை வழிமொழிந்தனர். இதன்பிறகு, அனைத்து எம்எல்ஏ-க்களாலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவசேனை தலைவர் அனில் தேசாய் தெரிவிக்கையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com