தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதல்வராகிறார் உத்தவ்!

தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன்முறையாக உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன்முறையாக உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரே 1966-இல் சிவசேனை கட்சியைத் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை கூட்டணி வைத்ததில்லை. இதன்மூலம், மூன்று கட்சிகளும் தற்போது முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளன.

அதேசமயம், பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து யாருமே தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன்முறையாக உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த வரிசையில் தற்போது தாக்கரே குடும்பத்தின் முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ளார். அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத காரணத்தினால், முதல்வராகப் பதவியேற்றவுடன் அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவையிலோ அல்லது சட்ட மேலவையிலோ போட்டியிட்டு வெற்றி பெற வேண்டியுள்ளது.

எனவே, சிவசேனை எம்எல்ஏ யாரேனும் தங்களது பதவியை ராஜிநாமா செய்து உத்தவ் தாக்கரேவுக்கு வழி வகுக்கலாம் என்று தெரிகிறது. ஒருவேளை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேகூட தனது பதவியை ராஜிநாமா செய்து தந்தைக்கு வழி வகுக்கலாம்.

உத்தவ் தாக்கரேவின் அரசியல் வாழ்க்கை:

உத்தவ் தாக்கரே ஜூலை 27, 1960-இல் பிறந்தார். சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையின் பொறுப்பை ஏற்றதில் இருந்து உத்தவ் தாக்கரேவின் அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது. 1999-இல் மகாராஷ்டிர முதல்வராக இருந்த சிவசேனை கட்சியின் நாராயண் ராணேவுடைய நிர்வாகத் திறன் மற்றும் வேலைப் பாணியை உத்தவ் தாக்கரே வெளிப்படையாக விமரிசித்தார். இது கடைசியில் ராணேவின் ராஜிநாமாவில் போய் முடிந்தது. இதைத்தொடர்ந்து, ராணே கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து, 2002-ஆம் ஆண்டு பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனையை மாபெரும் வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார். 2003-இல் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 2012-இல் பால் தாக்கரேவின் மறைவுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே கட்சியின் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com