மும்பையில் கொட்டித் தீர்க்கும் மழை: பள்ளி, கல்லூரிகள் விடுமுறை; சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உட்பட பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை கன மழை காரணமாக தண்டவாளங்களை சூழ்ந்திருக்கும் வெள்ளம்
மும்பை கன மழை காரணமாக தண்டவாளங்களை சூழ்ந்திருக்கும் வெள்ளம்


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உட்பட பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் 118 விமானங்கள் தாமதமாகப் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகள், வேறு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

கனமழை காரணமாக, சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக பயணிகளை எதிர்கொள்ளும் இரண்டாவது விமான நிலையமான மும்பை விமான நிலையம், கன மழை காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலும் மகராஷ்டிரத்தின் மற்ற பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளிலும், மும்பையிலும் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் தான் மழை ஓய்ந்தது. இந்நிலையில் மும்பையிலும் மகாராஷ்டிரத்தின் மற்ற பகுதிகளிலும் கடந்த திங்கள்கிழமை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை இரவிலும் புதன்கிழமை காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் விதர்பா பிராந்தியத்தில் உள்ள கட்சிரோலி மற்றும் கோண்டியா ஆகிய மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி வரும் நிலையில், மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது. 

இதனால் மத்திய மற்றும் துறைமுக ரயில் வழித்தடங்களிலும் மேற்கு வழித்தடத்திலும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

நல்லாபோரா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நேற்று வசாய் - விரார் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்கள் நிறுத்தப்பட்டதாக மேற்கு ரயில்வே தெரிவித்தது. தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியதால் ஜெய்ப்பூர்-மும்பை துரந்தோ விரைவு ரயில் வைதர்ணா நிலையத்துக்கு அருகே ஒரு மணிநேரத்துக்கு மேல் நின்றிருந்தது. வெள்ளச் சூழல் குறித்து தங்களுக்கு உரிய நேரத்தில் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்று சில பயணிகள் புகார் தெரிவித்தனர்.

மும்பை விமான நிலையம் நோக்கி வந்த 5 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக நேற்று உடனடியாகத் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து விட்டு வர நேரிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் மும்பையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தெற்கு மும்பையை விட புறநகர்ப் பகுதிகள் கடந்த 24 மணிநேரத்தில் அதிக மழைபொழிவைப் பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com