மகாராஷ்டிரம்: 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

மகாராஷ்டிரத்தில் 10 நாள்கள் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை  கோலாகலமாகத் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து


மகாராஷ்டிரத்தில் 10 நாள்கள் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை  கோலாகலமாகத் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து  பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இனிப்புகளை வழங்கியும், கணேச மந்திரங்களை முழக்கமிட்டும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோலாப்பூர், சாங்லி மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினர். 
மும்பையில்  இந்த ஆண்டில் மட்டும் 7,703 பேர் 1.63 லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சிலைக் கொண்டாட்டங்களுக்காக கொங்கண் மண்டலத்துக்குச் செல்பவர்களுக்கு வசதியாக இந்திய ரயில்வே, மகாராஷ்டிர சாலைப் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து நிறுவனங்கள் இணைந்து கூடுதல் பயண வசதியை ஏற்படுத்தியுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பை போலீஸார் ஏற்கெனவே பொதுவான எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களால் மும்பை மாநகரத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக போஸீஸார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்பட்ட பிறகு சிலைகள் அனைத்தும் வரும் 12-ஆம் தேதி சதுர்த்தசியன்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
பிரதமர் மோடி, சோனியா வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், இந்தியர் ஒவ்வொருவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சோனியா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா கலாசார ஒற்றுமைக்கு ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. 
அனைத்து சமூகத்தினரிடையேயும் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com