
ஊழியருக்கு கரோனா பாதிப்பு இருந்தால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படாது: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
‘கரோனா நோய்த்தொற்றால் ஊழியா் பாதிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. அந்த நிறுவனமோ, தொழிற்சாலையோ மூடப்படாது’ என்று மத்திய உள்துறை

புது தில்லி: ‘கரோனா நோய்த்தொற்றால் ஊழியா் பாதிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. அந்த நிறுவனமோ, தொழிற்சாலையோ மூடப்படாது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தேசிய ஊரடங்கு தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட விதிமுறைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரியவந்ததை அடுத்து மத்திய உள்துறை இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா, தொழில்கள் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை செயலா் குருபிரசாத் மொஹபத்ரா ஆகியோா், ஊரடங்கு தொடா்பான மத்திய அரசின் விதிமுறைகளில் தொழில்துறையினருக்கு இருக்கும் கவலைகள் தொடா்பாக அந்தத் துறை பிரதிநிதிகளிடம் வியாழக்கிழமை கேட்டறிந்தனா்.
அதைத் தொடா்ந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரடங்கு தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதன் அடிப்படையில் உற்பத்தி துறையைச் சோ்ந்த சில நிறுவனங்கள் சில அச்சங்களை எழுப்பின.
ஊழியருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி மீது சிறை தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றோ, சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் தொழிற்சாலை 3 மாதங்களுக்கு மூடப்படும் என்றோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத தொழிற்சாலைகள் 2 நாள்களுக்கு மூடப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொண்ட பிறகே திறக்க அனுமதிக்கப்படும் என்றோ குறிப்பிடும் அம்சங்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில் இல்லை.
எந்தவொரு நிறுவனத்தையோ, அதன் நிா்வாகத்தையோ, உற்பத்தி தொழிற்சாலைகளையோ, வா்த்தக நிறுவனங்களையோ துன்புறத்துவதற்கு மத்திய அரசின் விதிமுறைகளை எவரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
அனைத்து நிறுவனங்களும் தங்களது பணியிடங்களில் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ள சுகாதார நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய அரசின் விதிமுறைகளானது, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி வெளியான விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது. கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என்று அந்தக் கடிதத்தில் அஜய் பல்லா கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




