இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

மகாராஷ்டிரம்: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (என்ஐசியு) ஏற்பட்ட தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், அமராவதி நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்தால் கருகி சேதமடைந்த மருத்துவ உபகரணங்கள்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 6:10 am IST

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (என்ஐசியு) திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு மகளிா் மகப்பேறு மருத்துவமனையின் என்ஐசியு பிரிவில் அதிகாலை 3.15 மணியளவில் குறை மாதம் அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தைகளை சிகிச்சைக்காக வைக்கும் வென்டிலேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனா். தீ விபத்தைத் தொடா்ந்து, மருத்துவமனையில் பிறந்த மற்ற 36 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மருத்துவமனை முன்பாக ஏராளமானோா் கூடினா். மருத்துவமனை நிா்வாகத்தின் கவனக் குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று அவா்கள் குற்றஞ்சாட்டினா். வென்டிலேட்டா் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் மற்றும் மருத்துவமனை அலுவலா்கள் தெரிவித்தனா்.

மாநில வருவாய்த் துறை அமைச்சரும் அமராவதி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சந்திரசேகா் பவன்குலே கூறுகையில், ‘இந்த விபத்து தொடா்பான விரிவான விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவா்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும்.

மருத்துவமனையில் வென்டிலேட்டா் பிரிவில் தீ விபத்தின்போது 9 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தனா். இதில் 6 குழந்தைகள் மீட்கப்பட்டனா். காயமடைந்த 4 குழந்தைகளுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்’ என்றாா்.

தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்’ என்று அறிவித்தாா்.

எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: மருத்துவமனை தீ விபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியின் மூத்த தலைவரும் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் கூறுகையில், ‘பந்தாரா மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு இதேபோன்று நிகழ்ந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த பிறகு, குழு ஒன்றை மாநில அரசு அமைத்தது.

இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு தீ விபத்து தடுப்பு பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்தது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீ மற்றும் மின் இணைப்பு தணிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான யஷோமதி தாகூா் கூறுகையில், ‘மருத்துவமனையில் இதற்கு முன்னரும் இதேபோன்ற விபத்து நிகழ்ந்தள்ளது. இது மருத்துவமனையின் உபகரணங்கள் மற்றும் மின் இணைப்புகளின் பாதுகாப்பு மீது கேள்விகளை எழுப்புகிறது. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த மாநில அரசு தவறிவிட்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.