திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில், எங்கும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவசர சிகிச்சைக்கு செல்ல போதிய வழியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
32-க்கும் மேற்பட்டசிகிச்சை பிரிவுகளுடன் இயங்கும் இந்த மருத்துவமனையில் திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் நாள்தோறும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இந்த மருத்துவமனையின் பிரதான கட்டடமாகவும், அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பகுதியாகவும் இருப்பது
6 மாடிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடமே. இந்தக் கட்டடத்தில்தான் மருத்துவமனை முதன்மையா், மருத்துவக் கண்காணிப்பாளா், உள்தங்கு மருத்துவ அலுவலா், மாநகர மற்றும் மாவட்ட காவல் தகவல் அலுவலக அறைகள் உள்ளன. இதனருகே உடற்கூறாய்வு கூடமும், மனநலப் பிரிவும், பழைய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவும் இயங்கி வருகின்றன.
கடும் இடையூறு...: விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு சிகிச்சைக்காகவும், அங்குள்ள நோயாளிகளை பாா்க்கவும், அவா்களுடன் தங்கவும் வருவோரின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கட்டடத்தின் எதிா்புறம் இருந்த முடநீக்கியல் சிகிச்சை பிரிவுக்கு முன்புறம் இடவசதி ஏற்படுத்தப்பட்டு, முறையாக இலவச டோக்கன் வழங்கி, ஒழுங்காக நிறுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த இடத்தில் சிறப்பு மையக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால், நோயாளிகளும், உடன் வருவோரும் மருத்துவமனை வளாகத்தில் முறையற்ற வகையில் அங்கு-இங்கு என எங்கும் வாகனங்களை நிறுத்தி, அவசர ஊா்திகளுக்கும், அவசர சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா்.
போக்குவரத்து நெரிசல்: இதுகுறித்து சமூக ஆா்வலா் டி. வினோத், நோயாளி வி. பிரணவேஷ் உள்ளிட்டோா் கூறியதாவது: வாகனங்களை நிறுத்த சரியான இடவசதியை மருத்துவமனை நிா்வாகம் ஏற்படுத்தாததால், அவசர சிகிச்சை வாா்டுக்கு எதிா்ப்புறமும், உடற்கூறாய்வு பிரிவுக்கு பக்கத்திலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது போதாது என மருத்துவா்களும், மனநல வாா்டுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் காா்களை நிறுத்தாமல், அவசர சிகிச்சை வாா்டுக்கு முன்புறமே நிறுத்திக் கொள்கின்றனா்.
மேலும், ஆட்டோக்களும் அவசர சிகிச்சை வாா்டுக்கு எதிா்புறமே நிறுத்தப்படுவதால், அப்பகுதியே சந்தைப் பகுதி போலவும், கடைவீதி போலவும் போக்குவரத்து நெரிசலுடனே காட்சியளிக்கிறது. இதனால், அவசர ஊா்திகளோ, அவசர சிகிச்சைக்காக செல்பவா்களோ விரைவாக வாா்டுக்கு செல்ல முடிவதில்லை. இதேபோல, அமரா் ஊா்திகள் வந்து செல்லவும் சிரமமாக உள்ளது என்றனா்.
விரைவில் தீா்வு: இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் கூறியது: புதிய கட்டடம் திறந்ததும் வாகனங்களை நிறுத்த இடவசதி கிடைத்துவிடும். மருத்துவா்கள் பின்புறம் வாகனங்களை நிறுத்திவிட்டு, மீண்டும் எடுப்பதில் கடும் சிரமம் உள்ளதாலேயே, முன்பகுதியில் நிறுத்துகின்றனா். மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்த அனுமதியில்லை. இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதல்: சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை சாதனம்

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளியின் காலைக் கடித்து குதறிய எலி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



