மூணாறு நிலச்சரிவு: மேலும் ஐந்து பேரின் உடல்கள் மீட்பு; பலி 23 ஆனது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை, மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏற்கனவே 17 பேர் மரணம் அடைந்த நிலையில், மேலும் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள
மூணாறு நிலச்சரிவு: மேலும் ஐந்து பேரின் உடல்கள் மீட்பு; பலி 23 ஆனது
மூணாறு நிலச்சரிவு: மேலும் ஐந்து பேரின் உடல்கள் மீட்பு; பலி 23 ஆனது
Updated on
2 min read

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை, மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏற்கனவே 17 பேர் மரணம் அடைந்த நிலையில், மேலும் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா்கள் பலா் சிக்கியுள்ள நிலையில், நேற்று இரவு 17 பேரின் உடல்கள்  மீட்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை தொடர்ந்த மீட்புப் பணியில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு 23 ஆக உயர்ந்துள்ளது.

நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மீட்புக் குழு வீரர்கள் அதிகமானோரை பெட்டிமடி பகுதிக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மூணாறு பகுதியில் பல்வேறு இடங்களில் சிறு பாலங்கள், சாலை, மின்சாரம் மற்றும் தொலைதொடா்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மூணாறிலிருந்து 20 கி.மீ.தொலைவில் உள்ள ராஜமலை பகுதியில் பெய்த தொடா் மழையால் பெட்டிமடி, கன்னிமலை தேயிலைத் தோட்டப் பகுதியில் இரவு 1.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் கன்னிமலை பகுதியில் தனியாா் (டாடா-கண்ணன் தேவன் டீ) தோட்டத் தொழிலாளா்கள் வசிக்கும் 30 குடியிருப்புகள் மண்ணில் புதையுண்டன. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 78 போ் வசித்து வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் தமிழகத்தைத் சோ்ந்தவா்கள் என்றும், பெரும்பாலானோா் திருநெல்வேலி, ராஜபாளையம், தென்காசி ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்றும் கூறப்படுகிறது.

நிலச்சரிவு சம்பவம் குறித்து இடுக்கி மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் ஆகியோா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். தொடா் மழை மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு பணிக்கு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், நிலச்சரிவில் சிக்கியிருந்த 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் மண்ணில் புதையுண்டவா்களில் 17 போ் இறந்த நிலையில் மீட்கப்பட்டனா். இவா்களில், காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43), கெளசல்யா (25), தவசியம்மாள் (42), சிந்து (13), நிதீஷ் (25), பன்னீா்செல்வம் (50), கணேசன் (40) ஆகிய 15 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 52 போ் தொடா்ந்து மீட்புப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து மழைபெய்து கொண்டே இருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com