முகநூல் பதிவால் பெங்களூருவில் வன்முறை; மூவர் பலி; 110 பேர் கைது
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் தனது முகநூலில், ஒரு மதத்தினருக்கு எதிராக வெளியிட்ட கருத்தால் நேற்று நள்ளிரவில் பெங்களூருவில் வன்முறை வெடித்தது.


பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் உறவினர் தனது முகநூலில், ஒரு மதத்தினருக்கு எதிராக வெளியிட்ட கருத்தால் நேற்று நள்ளிரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது.
ஒரு மதத்தினருக்கு எதிராக சமூக வலைத்தளப் பதிவால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாஸின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. மற்றொரு எம்எல்ஏவான கவல் பைரசந்திராவின் வீட்டை வன்முறை கும்பல் முற்றுகையிட்ட போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் அடைந்த வன்முறை கும்பல் கேஜி ஹள்ளி மற்றும் டிஜே ஹள்ளி காவல்நிலையத்தை முற்றுகையிட்டது.
காவல்நிலையம் மீது கற்களை வீசியும், காவல் வாகனங்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை, காவலர்கள் தடியடி நடத்திக் கலைத்தனர். வன்முறையாளர்களில் சிலர் காவல்நிலையத்துக்கு தீ வைத்துக் கொளுத்த நடந்த முயற்சியும் காவலர்களின் அதிரடி நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.

இதற்கிடையே, கிழக்கு பெங்களூருவின் கேஜி ஹள்ளி பகுதியில் நடந்த வன்முறையை அடக்க காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். வன்முறை கும்பலில் இருந்த சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியும், அங்கிருந்த வாகனங்களை தீயிட்டும் கொளுத்தினர். இதனால், வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்கியதில் பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 110 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வன்முறையாளர்களில் சிலர் பெரிய கட்டடங்கள் மீது ஏறி நின்று காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது.
அமைதியை ஏற்படுத்த காவலர்கள் எடுத்த தொடர் நடவடிக்கைப் பிறகும் அந்த கும்பலின் வன்முறை வெறியாட்டம் குறையாத நிலையில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வன்முறை கும்பல், காவலர்களையும், காவல் வாகனங்களையும் குறி வைத்துத் தாக்கினர். பல முறை எச்சரித்தும் வன்முறை கும்பல் கலைந்துசெல்லாததால், காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர். இரவு முழுவதும் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலையே நீடித்தது. வன்முறையாளர்களுடன் நடந்த மோதலில் சுமார் 60 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.
வன்முறைக்குக் காரணமாகவிருந்த குற்றத்துக்காக, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தியின் சகோதரியின் மகன் நவீனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் கமல் பாண்ட் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை வெடித்த டிஜே ஹள்ளி மற்றும் கேஜி ஹள்ளி காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெங்களூரு மக்கள் அமைதி காக்குமாறு எம்எல்ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தை பதவிட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பெங்களூருவில் வன்முறை வெடித்ததை அடுத்து முதல்வர் எடியூரப்பா, நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஹமீர் அகமது கான், ரிஸ்வான் அர்ஷத் ஆகியோர் வன்முறை நடந்த பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். காவல்துறை ஆணையர் கமல் பாண்ட் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட நவீன், தனது முகநூல் பக்கத்தை சமூகவிரோதிகள் முடக்கிவிட்டதாக புகார் அளித்துள்ளதாகவும், வன்முறை வெடித்ததுமே, அவர் காவல்நிலையத்தில் ஆஜரானதாகவும் காவல்நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவின் டிஜே ஹள்ளி பகுதி எப்போதும் மதரீதியாக பதற்றம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு, ஒரு முகநூலில் பதிவிடப்பட்ட கருத்தால் நேற்று நள்ளிரவு முழுவதும் வன்முறை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...