மக்கள் சென்றுவர எவ்விதத் தடையும் கூடாது: மத்திய அரசு

மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்...
கோப்புப்படம்
கோப்புப்படம்


மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநிலங்களின்  தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு உள்துறை அமைச்சக செயலர் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

"மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது. இதுபோன்று தடை விதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும். மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்குத் தடை விதிப்பது பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பை பாதிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் உள்துறை அமைச்சக செயலர்.

இந்தக் கடிதத்தின்படி செயல்பட வேண்டியிருந்தால், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள இ-பாஸ்  முறை ரத்து செய்யப்பட வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே, மாவட்டங்களுக்கு இடையே சென்றுவர இ - பாஸ் பெற வேண்டியதன் காரணமாக மக்கள் படும் அவதியுடன், ஏராளமான முறைகேடு புகார்களும் வந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ - பாஸ் என்று தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் இந்த தளர்வு அறிவிப்பாலும்  பெரியளவில் பயனேதும் ஏற்படவில்லை.

மத்திய அரசின் தற்போதைய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறை தொடருமா, பொதுப் போக்குவரத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது பற்றி விரைவில் தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com