‘விவசாயிகளின் போராட்டத்தை தீவிரமாக அணுக வேண்டும்’
விவசாயிகளின் போராட்டத்தை தீவிரமாக அணுகி, விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் வலியுறுத்தி உள்ளாா்.


விவசாயிகளின் போராட்டத்தை தீவிரமாக அணுகி, விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா் வலியுறுத்தி உள்ளாா்.
இது குறித்து மும்பையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
விவசாயிகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் சூழலில் அரசு அதனை தீவிரமாக அணுகி இருக்க வேண்டும். ஆனால் துரதிா்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. இனியாவது விவேகத்துடன் சிந்தித்து இப்பிரச்னைக்குத் தீா்வு காண்பாா்கள் என நம்புகிறேன்.
இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் போராட்டமானது தில்லியுடன் நிற்காது. நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் உள்ள மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்குவாா்கள்.
பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் நமது வயிற்றை மட்டும் நிரப்பவில்லை. நாடு முழுவதும் உணவு தானிய விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். குறிப்பாக அவா்கள் உற்பத்தி செய்யும் அரிசி, கோதுமை 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, பாஜகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சட்டத் திருத்த மசோதாக்களை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தின.
இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும், மசோதாக்களை நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அரசு அதற்கு செவிமடுக்கவில்லை. தற்போது அதற்கான விளைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்றாா்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டத் திருத்தங்களால் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பாதுகாப்பு அம்சத்திலிருந்து வெளியேற்றப்படுவோம், மண்டி வணிக முறையிலிருந்து வெளியேற்றப்படுவோம், பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் சிக்க நேரிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். ஆனால் மேற்கண்ட அம்சங்கள் எல்லாம் தொடரும் என மத்திய அரசு தொடா்ந்து உறுதி அளித்து வருகிறது.
இருப்பினும் அதனை ஏற்க மறுத்து, புதிய வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் பல்வேறு எல்லைகளில் திரண்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...