ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

புதிய நாடாளுமன்ற கட்டடம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

News image
புதிய நாடாளுமன்ற கட்டடம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
Updated On :7 டிசம்பர் 2020, 6:04 am

ANI


புது தில்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

தில்லியில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, வரும் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறாா். 

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அப்பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

வெறும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறப் போவதாக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை அடுத்து, நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில், கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்டவும் பழைய கட்டடங்களை இடிக்கவும் தடை விதித்ததோடு, புதிய கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எழுப்புவதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

இத்தகைய சூழலில், புதிய கட்டடத்துக்கு பிரதமா் மோடி, வரும் 10-ஆம் தேதி பகல் 1 மணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்திருந்தார்.

அப்போது, தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. அதற்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடம் எழுப்பப்படவுள்ளதாகவும், 

புதிய கட்டடம் நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அமையவுள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையுடன் 64,500 சதுர மீட்டா் பரப்பில் நாடாளுமன்றக் கட்டடம் எழுப்பப்படவுள்ளது. கட்டுமானப் பணியில் 2,000 போ் நேரடியாகவும் 9,000 போ் மறைமுகமாகவும் ஈடுபடவுள்ளனா்.

தரைத்தளம், தரைக்குக் கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் நான்கு தளங்களுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படவுள்ளது. புதிய கட்டடத்தின் வெளித்தோற்றமும், மொத்த உயரமும் தற்போதைய நாடாளுமன்றத்துக்கு சமமானதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான அலுவலகங்கள் அடங்கிய வளாகம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் எழுப்பப்படவுள்ளது. அதே வேளையில், தற்போதைய நாடாளுமன்றக் கட்டடமானது, கட்டடக்கலையின் சிறப்பாகப் போற்றிப் பாதுகாக்கப்படும்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடா் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கிறோம். அடிக்கல் நாட்டு விழா, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெறும். விழாவில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

சிறப்பம்சங்கள்:

காகிதப் பயன்பாட்டுக்கு அவசியமில்லாத வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பெரும் மண்டபம் அமைக்கப்படவுள்ளது. நூலகம், நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஓய்வறைகள், நிலைக் குழுக்களுக்கான அலுவலகங்கள், உணவகம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை புதிய கட்டடத்தில் அமைக்கப்படவுள்ளன.

விதிமுறைகளின்படி, மக்களவைத் தலைவரே நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பாதுகாவலா் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.