சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்துக்கு அனுமதி

சென்னை- சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லும் என்று உச்சநீதின்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :8 டிசம்பர் 2020, 10:12 pm

சென்னை- சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லும் என்று உச்சநீதின்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
 இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அனுமதித்து உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
 மத்திய அரசின் "பாரத் மாலா' திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் சேலம் - சென்னை இடையே 277.3 கி.மீ. எட்டு வழி பசுமைச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 35 நில உரிமையாளர்கள் மற்றும் பலர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடுத்தனர்.
 இவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை சட்ட விரோதம்' எனக் கூறி ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், "நிலம் கையகப்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படுவதும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுவதும் அவசியம்' என்று தெரிவித்தது.
 தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீடு: உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது.
 இதனிடையே, மத்திய அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனு மீதான வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் 1-இல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
 தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பை அளித்தது. 140 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கட்டாயப்படுத்தும் வகையில், 1956-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும், அறிவிக்கையைப் பொருத்தமட்டில், உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தை செயல்படுத்துவது அல்லது உரிய பணியைத் தொடங்கும் முன், செயல்படுத்தும் முகமையால் சுற்றுச்சூழல் அல்லது வன அனுமதி பெறப்பட வேண்டும்.
 அதேபோன்று, சுற்றுச் சூழல் மற்றும் வனச் சட்டங்களின் கீழ் உரிய துறையினரால் வழங்கப்பட்ட அனுமதிகளின் செல்லுபடித் தன்மை குறித்து எந்தக் கருத்தும் நீதிமன்றம் வெளிப்படுத்தவில்லை.
 சுற்றுச்சூழல் மற்றும் வன விதிகளின் கீழ் அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செல்லுபடியாகுமா எனக் கேட்டு முறையிடவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட நபர்கள், இதன் செல்லுபடித் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் முறையிட வேண்டியிருக்கும்.
 சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கான அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மத்திய அரசும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகமும் மேற்கொள்ளலாம். நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து நில உரிமையாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.