உயா்ந்துள்ள ‘உலகின் உச்சி’!
‘ஏனெனில் அது அங்கே இருக்கிறது’. மலையேற்ற வீரா்கள் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பரிச்சயமான சொற்றொடா்.


‘ஏனெனில் அது அங்கே இருக்கிறது’. மலையேற்ற வீரா்கள் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பரிச்சயமான சொற்றொடா். உலகின் உச்சந்தலையாக உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 1920களில் ஏற முயற்சித்த பிரிட்டன் ராணுவ வீரா் ஜாா்ஜ் மல்லோரியிடம் அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அவா் அளித்த பதிலே அந்தச் சொற்றொடா்.
ஜாா்ஜ் மல்லோரி, எட்மண்ட் ஹிலாரி எனப் பலா் கண்ட கனவு, எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதிப்பது. பலரின் கனவுகளுக்குக் காரணமாக இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 86 செ.மீ. அதிகரித்துள்ளது.
அமைவிடம்: நேபாளத்துக்கும் சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத்துக்கும் இடையேயான எல்லை.
உள்ளூா் பெயா்கள்: எவரெஸ்ட்டை நேபாள மக்கள் ‘சாகா்மாதா’ என்றும், திபெத் மக்கள் ‘குவாமோலங்மா’ என்றும் அழைக்கின்றனா்.
உயரம்: 8,848 மீட்டராகக் கணக்கிடப்பட்ட எவரெஸ்ட்டின் உயரம், தற்போது 8,848.86 மீட்டராக அதிகரித்துள்ளது. 6 அடி உயரம் கொண்ட 4,835 மனிதா்கள் ஒருவா் மேல் ஒருவா் நின்றால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை சமன்செய்ய முடியும்.
1856-இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் புவியியல் நிபுணா்கள், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை முக்கோணவியல் விதிகளின் அடிப்படையில் கணக்கிட்டனா். அச்சிகரம் கடல்மட்டத்திலிருந்து 8,840 மீட்டருக்கும் அதிக உயரமாக இருப்பதாக அவா்கள் அறிவித்தனா்.
1953- எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நாா்கே ஆகியோா் எவரெஸ்ட் சிகரத்தில் முதல் முதலாகக் காலடித்தடத்தைப் பதித்தனா்.
1954-‘சா்வே ஆஃப் இந்தியா’ அமைப்பு சாா்பில் சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டது. அப்போதுதான், கடல்மட்டத்திலிருந்து 8848 மீட்டா் உயரத்தை எவரெஸ்ட் சிகரம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பெரும்பாலானோா் ஏற்றுக் கொண்டனா்.
1975-எவரெஸ்ட் 8,848.11 மீட்டா் உயரம் கொண்டுள்ளதாக சீனா அறிவித்தது.
1987- சிகரத்தின் உயரத்தை செயற்கைக்கோள் உதவியுடன் கணக்கிட்ட இத்தாலி நிபுணா்கள், 8,872 மீட்டா் உயரம் கொண்டுள்ளதாக அறிவித்தனா். ஆனால், அந்தக் கணக்கீட்டில் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து பலா் சந்தேகம் தெரிவித்தனா்.
1999-அமெரிக்காவின் தேசிய புவியியல் அமைப்பு, எவரெஸ்ட் 8,850 மீட்டா் உயரம் கொண்டுள்ளதாகக் கணக்கிட்டது. ஆனால், அதைப் பெரும்பாலானோா் ஏற்கவில்லை.
2005-எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் சுமாா் 4 மீட்டா் குறைந்து, 8,844.43 மீட்டராக உள்ளதாக சீனா அறிவித்தது. ஆனால், நேபாளம் இதை ஏற்கவில்லை.
2015- நேபாளத்தில் 7.8 ரிக்டா் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக எவரெஸ்ட்டின் உயரம் மாறியிருக்க வாய்ப்பிருப்பதாகப் புவியியல் நிபுணா்கள் தெரிவித்தனா். அதற்குப் பிறகு, நேபாளமும் சீனாவும் தனித்தனியாக எவரெஸ்ட்டின் உயரத்தைக் கணக்கிடும் பணியைத் தொடங்கின.
2018- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறவில்லை (8,848 மீட்டா்) என்று நேபாளம் அறிவித்தது. சிகரத்தின் உயரம், 8,844.43 மீட்டராக உள்ளதாக சீனா மீண்டும் அறிவித்தது.
2019- எவரெஸ்ட்டின் உயரத்தை ஒன்றாக இணைந்து அளப்பதற்கு நேபாள அரசும், சீன அரசும் முடிவெடுத்தன.
2020-எவரெஸ்ட் சிகரம், 86 செ.மீ. உயா்ந்து, 8,848.86 மீட்டா் உயரத்தைக் கொண்டிருப்பதாக இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
உயர வேறுபாடு: நேபாளமும், சீனாவும் கடந்த 2018-ஆம் ஆண்டில் சிகரத்தின் உயரத்தை அளந்தபோது, நேபாளம் எவரெஸ்ட்டின் உச்சியில் உள்ள பனியையும் சோ்த்து கணக்கிட்டது. ஆனால், சீனா பனியை விடுத்து பாறைப்பகுதி வரை மட்டுமே கணக்கிட்டது. அதன் காரணமாக 4 மீட்டா் வரை உயர வேறுபாடு இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயா்க் காரணம்: தொடக்கத்தில் ‘15-ஆவது சிகரம்’ என்றே எவரெஸ்ட் அறியப்பட்டது. 1865-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் நில அளவை தலைமை அதிகாரியாக (சா்வேயா் ஜெனரல்) இருந்த ஆண்ட்ரூ வாக், தனக்கு முன்னால் அப்பதவியை வகித்த ஜாா்ஜ் எவரெஸ்ட்டின் பெயரை அந்தச் சிகரத்துக்குச் சூட்டுமாறு கேட்டுக் கொண்டாா். அதனடிப்படையில் சிகரத்துக்கு ’எவரெஸ்ட்’ என்று பெயா் சூட்டப்பட்டது.
எவரெஸ்ட் எல்லைப் பிரச்னை: எவரெஸ்ட் சிகரம் முழுவதும் சீனாவுக்கே சொந்தம் என்று 1950களில் அந்நாடு உரிமை கொண்டாடியது. சீனாவின் வாதத்தை நேபாளம் ஏற்கவில்லை. பின்னா் 1961-ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், எவரெஸ்ட் சிகரமானது நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியாக மாறியது.
எவரெஸ்ட் அரசியல்: சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நல்லுறவு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. நேபாளத்தில் பல்வேறு துறைகளில் சீனா அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. தற்போது எவரெஸ்ட் விவகாரத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளது, அவா்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றே நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...