இந்தியா - பிரிட்டன் உறவில் புதிய சகாப்தம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பது,
இந்தியா - பிரிட்டன் உறவில் புதிய சகாப்தம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
Updated on
1 min read

இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பது, இந்தியா - பிரிட்டன் உறவில் ஏற்பட்டுள்ள புதிய சகாப்தத்தின் அடையாளம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
 பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தில்லியில் 2021, ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில், பிரிட்டன் வெளியுறவு, மற்றும் காமன்வெல்த் விவகாரத் துறை அமைச்சர் டொமினிக் ராப் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை தில்லி வந்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தில்லி ஹைதராபாத் ஹவுஸில் சந்தித்தார்.
 சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர், இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே நடைபெற்ற முதல் இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்.
 இந்தச் சந்திப்பிற்கு பின்னர் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
 இரு தரப்பும் நீண்ட நேரம் பல்வேறு விவகாரங்களில் பரந்த அளவில் விவாதித்தோம். இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்த யோசனைகளில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பது, இந்தியா - பிரிட்டன் உறவில் புதிய சகாப்தத்தின் அடையாளமாகும். சமீபத்திய ஆண்டுகளில், உலகளாவிய அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியாவும் பிரிட்டனும் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம் இரு நாட்டு நலன்களில் சிறப்பாகச் செயல்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம். முக்கியமாக வர்த்தகம், ராணுவம், பாதுகாப்பு, காலநிலை, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
 மேலும் ஆப்கானிஸ்தானின் நிலைமை, வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பரிணாமங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு கவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளோம் என்றார் அவர்.
 இதைத்தொடர்ந்து, பிரிட்டன் அமைச்சர் டொமினிக் ராப் கூறுகையில், "2021-ஆம் ஆண்டு பிரிட்டன், ஜி-7 உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன்அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை ஏற்று இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்' என்றார்.
 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோரையும் டொமினிக் ராப் சந்திக்க உள்ளார். டிசம்பர் 17-இல் பெங்களூருக்கு சென்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவையும் அவர் சந்திக்கிறார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com