'சாமானியர்களின் சந்தோஷம், அன்பு, கோபம், வாழ்க்கை இதுதான் நம்ம 'மனிதன் தெய்வமாகலாம்' படம். கதையின் உள்ளடக்கமும் ஒன் லைனும் இதுதான்...' இரண்டே வார்த்தைகளில் திரைக்கதை வடிவம் பேசுகிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். 'ட்ரீப்', 'தூக்கு துரை' படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர். அவரிடம் தொடர்ந்து பேசியபோது:
'எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்க்கையும், அதனுள் புதைந்து கிடக்கும் அன்பும்தான் அடிப்படை. இதில் நான் சொல்ல வருவதும் அதுதான். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை என எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.
அவர்களின் வாழ்க்கை எவ்வளவு அழகானது. கிராமத்து மண் சாலை தொடங்கி சென்னை பெரு நகரத்தின் தார் சாலைகள் வரை நான் பயணித்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். அப்போது நான் பார்த்த, ரசித்த, வியந்த, தரித்த உலகங்களின் ஒரு சில காட்சிகள்தான் இந்தப் படம். எல்லாமே எங்கோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், தோள் சாய்ந்து அழுத தோழியின் கண்ணீர்...'
'மனிதன் தெய்வமாகலாம்'... கவர்ந்திழுக்கும் டைட்டிலா?
ஒரு மனித வாழ்க்கைக்கு இதைவிடப் பொருத்தமான தலைப்பு இல்லை. இங்கேயும் ஓர் அழகான காதல்தான். பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. பெண்ணின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம்.
இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களைவிட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகாக, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்துப் போட்டு விடும்.
ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போதும் அன்பும், பரிவும் நிரந்தரம். இந்தப் பின்னணிதான் முழுக் கதையும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்வை, அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை முன் வைக்கிற கதை.
இந்தப் பாணி கதைகள் ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவைதானே?
உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை.
இந்தக் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மன மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனதில், புத்தியில் ஏற்படுகிற அதிர்வின் காரணமாக மனமாற்றம் நிகழ்ந்து ஒரு புது வாழ்வு பரிசாகக் கிடைத்து விடும். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அது போன்ற நம்பிக்கைகள்தான் இந்தப் படம்.
வாழ்க்கை என்பது இங்கே மிகவும் எளிமையானது. ஆனால், பயங்கரமானது. இதுதான் இந்தப் படம். இந்திய அளவில் நடந்த ஓர் அரசியல் சர்ச்சையையும் கோர்த்து திரைக்கதை செய்தேன். நம் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்தக் கதை.
அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துகொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.
செல்வராகவன் என்ன ஸ்பெஷல்?
அவர் நடிப்பின் இன்னொரு பரிணாமம் இது. கடைசி வரை துணையாக நின்றார். அவ்வளவு நம்பிக்கை தந்தார். கௌசல்யா படத்துக்கு இன்னொரு நம்பிக்கை. இருவரும் கதையைத் தாங்கிப் பிடித்து வாழ்ந்திருக்கிறார்கள். சேலம் பக்கத்தில் ஒரு மலைக் கிராமம். அங்கேயே தங்கிப் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம்.
ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்குப் பொறுப்பாகி விடுகிறோம். இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, எத்தனை தமிழ்க் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம்.
பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய்விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதியாக குற்றங்கள் தொலைந்துவிடும்.
தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்றுப் பசிக்குச் சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இது ஒரு தீர்க்கமான அரசியல் பார்வை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு பயிற்சி
கோலிவுட் ஸ்டூடியோ
அதிசய கிராமம்!
ஆவணப் படத்துக்கும் அங்கீகாரம் தேவை...
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

