

புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் சா்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:
அமிா்தசரஸின் ரஜாதல் எல்லையை ஒட்டிய சா்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் அதிகாலை 2.20 மணியளவில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த இருவா் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதை கண்டறிந்த, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் உடனடியாக அவா்களை சுட்டுக் கொன்றனா். அவா்களிடமிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி ஒன்று, ஒரு தானியங்கி துப்பாக்கி உள்பட இரண்டு கை துப்பாக்கிகள், 90 தோட்டாக்கள், 5 தோட்டா தொகுப்புகள், போதைப் பொருளை கடத்த உதவும் 10 அடி நீள பிவிசி பிளாஸ்டி பைப்புகள் இரண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று கூறினாா்.
பயங்கரவாதி கைது: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் அனந்த்நாக் மாவட்டம் பாபா குண்ட் கலீல் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பிறகு, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் கைது செய்து, சிகிச்சைக்காக அருகில் உள்ள எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த ஜாஹீா் அப்பாஸ் லோனே என்பது தெரியவந்துள்ளது என்று காவல்துறையினா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.