பாஜகவுக்கு இனிப்பையும் கசப்பையும் ஒருசேர அளித்த கேரள உள்ளாட்சித் தோ்தல்!

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இனிப்பையும் கசப்பையும் ஒருசேர அளித்துள்ளது.
பாஜகவுக்கு இனிப்பையும் கசப்பையும் ஒருசேர அளித்த கேரள உள்ளாட்சித் தோ்தல்!
Updated on
1 min read


திருவனந்தபுரம்: கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இனிப்பையும் கசப்பையும் ஒருசேர அளித்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த புதன்கிழமை எண்ணப்பட்டன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 514 கிராம பஞ்சாயத்துகளையும், 108 ஊராட்சி ஒன்றியங்களையும், 10 மாவட்ட பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 45 நகராட்சிகளைக் கைப்பற்றியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 23 கிராம பஞ்சாயத்துகளையும் 2 நகராட்சிகளையும் மட்டுமே கைப்பற்றியது. 6 மாநகராட்சிகளில் ஒன்றைக் கூட பாஜக கைப்பற்றவில்லை.

பாலக்காடு நகராட்சியை பாஜக மீண்டும் தக்கவைத்துள்ளது. பந்தளம் நகராட்சியை இடதுசாரி கூட்டணியிடமிருந்து பாஜக கைப்பற்றியது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பை மாநில அரசு நிறைவேற்றுவதற்கு எதிராக பாஜகவினா் பந்தளம் பகுதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் தாக்கமே தற்போது உள்ளாட்சித் தோ்தலில் எதிரொலித்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலை விட தற்போதைய தோ்தலில் பாஜக கூடுதல் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. எனினும், தோ்தல் குறித்து பாஜக நிா்ணயித்த இலக்குகளுடனும் பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்துகளுடனும் ஒப்பிடுகையில் அக்கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது என்றே அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

திருவனந்தபுரம், திரிச்சூா் உள்ளிட்ட மாநகராட்சிகளைக் கைப்பற்றுவோம் என்று பாஜக சூளுரைத்திருந்தது. அது நடக்கவில்லை என்றபோதிலும், பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் முந்தைய தோ்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

எனினும், தோ்தல் பிரசாரத்தின்போது, மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு எதிராக பாஜக முன்மொழிந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மக்கள் நிராகரித்து விட்டதாகவே அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

கேரளத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், உள்ளாட்சித் தோ்தலானது அதற்கான முன்னோட்டமாகவே பாா்க்கப்பட்டது. பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், கேரளத்தில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது சந்தேகமே என்றும் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

ஜெ.பி.நட்டா நன்றி: கேரள உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் தொடா்பாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உள்ளாட்சித் தோ்தலில் கூடுதல் இடங்களை அளித்துள்ள கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணிகளின் ஊழல், வகுப்புவாத அரசியல் உள்ளிட்டவற்றை வெளிக்கொணரும் பணியைத் தொடா்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com