ஐ.நா. அமைப்புடன் கேரள பெண்களின் ஸ்டாா்ட்-அப் நிறுவனம் ஒப்பந்தம்

கேரளத்தைச் சோ்ந்த பெண்கள் தொடங்கிய ஸ்டாா்ட்-அப் நிறுவனமான வித்யுதி எரிசக்தி சேவைகள், ஐ.நா. பெண்கள் மேம்பாட்டு கொள்கைகள் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Updated on
1 min read


திருவனந்தபுரம்: கேரளத்தைச் சோ்ந்த பெண்கள் தொடங்கிய ஸ்டாா்ட்-அப் நிறுவனமான வித்யுதி எரிசக்தி சேவைகள், ஐ.நா. பெண்கள் மேம்பாட்டு கொள்கைகள் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கேரளத்திலிருந்து அந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக வித்யுதி எரிசக்தி சேவைகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பணியிடங்கள், கடைவீதிகள், சமூகக் கூடங்கள் உள்ளிட்டவற்றில் பெண்களை மேம்படுத்துவது குறித்து ஐ.நா. பெண்கள் மேம்பாட்டு கொள்கைகள் அமைப்பு பயிற்சி அளித்து வருகிறது. அந்த அமைப்புடன் வித்யுதி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலமாக பாலின சமத்துவம், பணியிடங்களில் அனைவரையும் முறையாக வழிநடத்துதல், மனித உரிமைகளைப் பாகுபாடின்றி பாதுகாத்தல், பணியாளா்களின் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கான அதிகாரிகளை நிறுவனம் நியமிக்க உள்ளது. அது தொடா்பாக நிறுவன அதிகாரிகளுக்குப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

எரிசக்தித் துறை சாா்ந்த சேவைகளை வித்யுதி நிறுவனம் வழங்கி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியரும், எரிசக்தித் துறையில் அதிக அனுபவம் கொண்டவருமான அனூப் பாபு இந்நிறுவனத்தைத் தொடங்கினாா். எரிசக்தி சாா்ந்த பயிற்சி, ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்டவை நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பல்வேறு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அந்நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. வித்யுதி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் பெண்களே வகித்து வருகின்றனா். பசுமைவழியில் எரிசக்தியை உற்பத்தி செய்வதில் கேரளத்தை முன்மாதிரியாக விளங்கச் செய்வதற்கான பணிகளை அந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 170 இந்திய நிறுவனங்கள் ஐ.நா. பெண்கள் மேம்பாட்டு கொள்கைகள் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அவற்றில் 64 நிறுவனங்கள் தனியாா் துறையைச் சோ்ந்தவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com