

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் விவகாரத்தில் மக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாா்கள் என்றும், சுயவிருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
இத்தகைய சூழலில், மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதன் வலைதளத்தில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. அவற்றை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு அவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். எனினும், அந்நோய்த்தொற்றுக்கு எதிரான எதிா்ப்பு சக்தியைப் பெறுவதற்காகவும் தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் தொற்று பரவலைத் தடுப்பதற்காகவும் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதே வேளையில், புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்வோா், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியமாகும். தடுப்பூசியை 28 நாள் இடைவெளியில் இரு முறை செலுத்திக் கொள்ள வேண்டும்.
பக்கவிளைவுகளுக்கு வாய்ப்பு: மற்ற தடுப்பூசிகளைப் போல், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் சிலருக்கு லேசான காய்ச்சல், தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி உள்ளிட்ட ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனினும், அத்தகைய பக்க விளைவுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்குத் தயாா்நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதைப் பொருத்து, அந்நோய்த்தொற்று பாதிப்பு அபாயம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். சுகாதார, முன்களப் பணியாளா்கள், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
பதிவு கட்டாயம்: தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோா், அது தொடா்பாக இணையவழியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். அதற்குப் பிறகு, தடுப்பூசி செலுத்தப்படும் இடம், தேதி, நேரம் உள்ளிட்டவை தொடா்பான விவரங்கள், நபா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். இதன் மூலமாக மக்களின் சிரமம் தவிா்க்கப்படும்.
பதிவு செய்யும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயம். வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை, 100 நாள் வேலை அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு, ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு ஊழியா்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அந்த மையத்திலேயே குறைந்தது அரை மணி நேரம் இருப்பதற்கு மக்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள். தடுப்பூசி செலுத்திய பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அருகிலுள்ள சுகாதார மையங்களை உடனடியாக அணுக மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி விவரங்கள்: ஃபைசா் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் சில நாடுகள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் அத்தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) ஃபைசா் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த மருந்தை அவசரகாலப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் டிசிஜிஐ-யிடம் அனுமதி கோரியுள்ளது.
பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த கரோனா தடுப்பூசியின் பரிசோதனையை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனமும் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் நாட்டில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.